spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

ஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனு விசாரணை குறித்து ஊடகவியலாளர் சத்தியராஜ் வெளியிட்ட காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- திருப்பரங்குன்றத்தில் நேற்று வன்முறை நடைபெறுவதற்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவு தான் காரணம். காலம் காலமாக இருந்த நடைமுறைகளுக்கு நேர் எதிராக எப்படி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த உத்தரவு வழங்கினார் என்று தமிழ்நாடு அரசு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மறுஆய்வு மனு போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது. ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவு காலங்காலமாக இருந்த நடைமுறைகளுக்கு எப்படி எதிராக உள்ளது என்பதற்கான மிக முக்கியமான 10 பாய்ண்ட்டுகளை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

அதில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன்னதாகவே நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விட்டது.6 மணிக்கு தீபம் ஏற்றாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று எதற்காக ஒரு நீதிபதி, நீதிமன்றத்தில் வெளிப்படையாக சொன்னார்? காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்படும். அதேபோல் நேற்று தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களும் வழிபாடு நடத்தினார்கள். ஆனால் திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயலும் இந்த கும்பல் யார்?

தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்ட பிறகும், தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்காக நீதிபதி எப்படி சிஎஸ்ஐஎப் வீரர்களை எதற்காக அனுப்பி வைத்தார்?  திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றுகிற பொறுப்பு கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ளது. அப்படி இருக்கும்போது ஆர்எஸ்எஸ் – இந்து முன்னணி கும்பலுக்கு எதற்காக பாதுகாப்பு வழங்க கோரி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கு முன்னதாகவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை விடுக்கிறார் என்றால் அவருக்கு என்ன விதமான அஜெண்டா இருந்தது? என்று தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியுள்ளது. தர்கா அருகே உள்ள எல்லைக்கல்லில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதால், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக 1996லேயே வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிர்வாகத்தை தவிர வேறு யாரும் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கிடையாது. எதிர்காலத்தில் பக்தர்கள் கோயிலின் மற்ற பகுதிகளில் தீபம் ஏற்ற விரும்பினால், தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2014ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தர்கா அமைந்துள்ள பகுதியில் உள்ள தூணில் தான் தீபம் ஏற்றுவோம் என்று மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால், தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் வழங்கவில்லை. அதனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கை 2014 டிசம்பர் 7ஆம் தேதி நீதிபதிகள் கல்யாண சுந்தரம், பவானி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அமைதியும், நல்லிணக்கமும் இருக்கும்போது அதை கெடுக்கும் விதமான வேலைகளை ஏன் செய்கிறீர்கள்? என்று வெளிப்படையாக கேட்டனர். இத்தகைய தீர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தீபம் ஏற்றுவதற்கு ஒரு நாளைக்கு  முன்னதாக திடீரென ஜிஆர் சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை வழங்கி கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று தமிழ்நாடு அரசு சொல்லியுள்ளது.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பால் மதப் பிரச்சினை உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தர்கா முன்புள்ள தூணில் 10 பேருடன் சென்று தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி சொன்ன நிலையில்,  மனுதாரர் ராம ரவிக்குமார் ஒரு பெருங்கூட்டத்தை கூட்டியிருந்தார். அவர் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஏதோ 10 பேரை கூட்டிபோய் தீபம் ஏற்றலாம் என்று ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்னதே தவறுதான். கோயில் நிர்வாகம் மட்டுமே அங்கு தீபம் ஏற்ற முடியும். அதற்கும் அறநிலையத் துறையினர் அனுமதி பெற்று தான் ஏற்ற முடியும். அப்படி இருக்கும்போது தன்னிச்சையாக ஒருவர் கேட்டால் நீதிமன்றம் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கிவிடுமா? என்று கேள்வி எழுகிறது.

தர்காவின் அருகில் உள்ளது எல்லைக் கல்லா? தீப தூணா? என்று பதில் அளிக்க சிக்கந்தர் தர்கா நிர்வாகத்திற்கு போதிய அவகாசம் வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்திய நில அளவை துறையினர் கருத்துப்படி ஆங்கிலேயர்கள் மலையின் உச்சியில் கல்லை நட்டுவைத்து அங்கிருந்து நிலத்தை அளப்பார்கள். அப்படியான நில அளவைக்கல் தான் அது. அந்த கல்லை பிடித்துக்கொண்டு அதுதான் தீபக்கல் என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த பிரச்சாரத்திற்கு ஏற்றபடி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த அன்றே, நீதிபதியால் இந்த வழக்கில் தண்டனையும் வழங்கிட முடியுமா? என்று அரசு கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றங்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கும் சிஎஸ்ஐஎப் படையை எடுத்துக்கொண்டு, மக்கள் வசிக்க கூடிய இடத்திற்கு வர முடியுமா? அதன் காரணமாகவே ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். சிஎஸ்ஐஎப் வீரர்கள் கோயிலுக்குள் உள்ளே வர முடியாமல் தடுக்கப்பட்டனர். ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பின்படி எல்லைக்கல்லில் தீபம் ஏற்றச் சென்றவர்களால் காவலர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்புகள் உடைக்கப்பட்டிருக்கிறது. ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை வைத்து கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சிஎஸ்ஐஎப் என்பது நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கானது மட்டும்தான். அவர்களை  தீபம் ஏற்றச் செல்வோருக்கு பாதுகாப்பு வழங்க ஜிஆர் சுவாமிநாதன் அனுப்பியது தவறு. சிஎஸ்ஐஎப் அதிகாரம் என்பது நீதிமன்ற வளாகத்திற்கு மட்டும்தான். அதை தாண்டி கிடையாது. காவல்துறைக்கு இணையாக அவர்களால் செயல்பட முடியாது. இது நியாயமான கேள்வியாகும். இதற்கு ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்து முன்னணி பதில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாடு அரசு ஆழமான, அறிவுப்பூர்வமான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் மதுரையின் பாதுகாப்பை மையமாக வைத்து, அடித்து ஆடியிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ