வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்தும் விதமாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கும் தலையங்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.


ஹரியானா தேர்தல் முறைகேடுகள் குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளை ஆதரித்து இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கும் தலையங்கம் குறித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது:- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வாக்கு திருட்டு நடவடிக்கையை தேர்தல் ஆணையமே மேற்கொள்வதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். அதற்கு வலு சேர்த்திடும் விதமாக ஆங்கில இந்து நாளிதழில் ஒரு தலையங்கமே வந்துள்ளது. அதில் ராகுல்காந்தி சொன்னவை அனைத்து உண்மை. தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய வாக்கு திருட்டை மேற்கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்து என்றும் இந்து தலையங்கம் சுட்டிகாட்டி இருக்கிறது.
2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்களை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். 93,174 தகுதி அற்ற வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக இந்து தலையங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதேபோன்று தான் மகாராஷ்டிராவிலும் தகுதி அற்ற வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலில் மங்கலான அல்லது போலி புகைப்படங்களைக் கொண்ட 1,24,177 வாக்காளர்கள் இருப்பதாக தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹரியானாவில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி பெயரில் 22 முறை வாக்களித்து இருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளதை இந்து தலையங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

தேர்தல் ஆணையம், பாஜக இணைந்து போலி வாக்காளர்களை சேர்க்கிறது என்றால், அதற்கு பதிலாக உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்று சந்தேகம் எழுப்பியுள்ளது. ஆனால் போலி வாக்காளர்கள், தகுதி அற்ற வாக்காளர்கள் , ஒரே பெண்ணின் புகைப்படம் 22 முறை இடம்பெற்றது குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும், தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப கோளாறு என்று பதில் அளிக்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று இந்து நாளேடு தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்லாமியர்கள், தலித்துகள் போன்றவர்களை மட்டும் தேடிப்பிடித்து நீக்குவது என்பது தொழில்நுட்ப கோளாறா? தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது என்று நாங்கள் நம்ப வேண்டுமா? என்று ராகுல்காந்தி எழுப்பிய கேள்வியின் நியாயத்தை உணர்ந்து, தங்களுடைய ஆய்வின் அடிப்படையில் ஆங்கில இந்து நாளிதழ் கேள்வி எழுப்பியிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் இருக்கும் குறைகள் குறித்த விமர்சனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. எதாவது தவறு நடைபெற்றால் தொழில்நுட்ப கோளாறு என்று சொல்கிற தேர்தல் ஆணையம், புகார் சொன்னால் அதை ஏன் அப்போதே சொல்லவில்லை என்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடர முடியாது என்று சொன்னவர்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்பே சொல்லி இருக்க வேண்டும் என்று மாற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை இந்து நாளிதழ் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக போலி வாக்காளர்கள், தகுதி அற்ற வாக்காளர்கள், 22 முறை பிரேசில் மாடல் பெயரில் வாக்களித்தவர்களின் விவரங்களை சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும் என்று இந்து தலையங்கம் வலியுறுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது போலியாக யார் வாக்களித்தார்கள்? எத்தனை பேர் வாக்களித்தார்கள்?. எத்தனை மணிக்கு வாக்களித்தார்கள்? என்கிற அனைத்து விவரங்களும் வெளியாகி விடும். அதை செய்தால் உடனடியாக பிரச்சினை சரியாகிவிடும். அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள் என்று இந்து நாளிதழ் வினவியுள்ளது. ஆனால் இதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பீகார் தேர்தல் முடிவுகளை பார்த்து பயந்து, ராகுல்காந்தி வாக்கு திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக சொல்கிறார்கள். ஆனால் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை ஏன் முன்னதாக சொல்லவில்லை என்று ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்புகிறது. ஏன் வாக்குப்பதிவு குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுக்கிறீர்கள். அப்போது தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இந்து ஆங்கில நாளிதழ் கண்டுபிடித்து எழுதியதும், ராகுல்காந்தி கண்டறிந்து சொன்னதும் மிக குறைவானவை போன்று தோன்றுகிறது. நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை பார்த்தால் நிறைய உண்மைகள் தெரியவரும் என்று நினைக்கிறேன். அதனால்தான் பாஜக, தேர்தல் ஆணையம் பதறுகிறார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


