Homeசெய்திகள்கட்டுரை‘ஜனநாயகன்’ ரிலீஸ்: அரசு விழாவாகக் கொண்டாடுவதா? – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கேள்வி!

‘ஜனநாயகன்’ ரிலீஸ்: அரசு விழாவாகக் கொண்டாடுவதா? – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கேள்வி!

-

- Advertisement -

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியுள்ள சூழலில், நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலேயே இந்த ரிலீஸ் கொண்டாட்டங்கள் அமைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் சாடியுள்ளார்.

ஜனநாயகன்

we-r-hiring

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு, ரூ.2,500 வரையிலான பிளாக் டிக்கெட் விற்பனை மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பாகக் கூறியதன் சுருக்கம்:

அரசு விழாவைப் போல் திரைப்பட ரிலீஸ் கொண்டாட்டம்

“ஒரு திரைப்படம் வெளியாவதும், அதனை ரசிகர்கள் கொண்டாடுவதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை ஏதோ ஒரு அரசு விழாவைப் போலக் கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.

பேனர் கலாச்சாரத்தை எதிர்த்தவர்களே இன்றைக்கு விதிகளை மீறிப் பல்வேறு இடங்களில் பேனர்களை வைத்துள்ளனர். உயர் அதிகாரிகள் முதல் காவல்துறை வரை படம் பார்க்காவிட்டால் ‘முதலமைச்சரின் படத்தை இவர்கள் பார்க்கவில்லையா?’ என்ற கேள்வி வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே திரையரங்கிற்குச் செல்லும் நிலை உருவாகியிருப்பது வருத்தமளிக்கிறது.”

ரூ.2,500 வரை பிளாக் டிக்கெட் விற்பனை: காவல்துறை மௌனம் ஏன்?

திரையரங்குகளில் ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை அதிக விலைக்குப் பிளாக் டிக்கெட்டுகள் விற்கப்படுவது குறித்துப் பேசிய அவர்:

“அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்று பேசிவிட்டு, தங்களது சொந்தப் படத்துக்கே ரசிகர்களிடம் பிளாக் டிக்கெட் முறையில் அதிகக் கட்டணம் வசூலிப்பதை வேடிக்கை பார்க்கின்றனர். இதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் அரசுக்கே அவப்பெயர் வரும் என்பதால், காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் மௌனம் காக்கிறது.”

நீட் போராட்டமும் இருவேறு பார்வைகளும்

ஒன்றிய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்களும் மாணவர்களும் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்துக் குறிப்பிடுகையில்:

“டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டால் அதை ‘ஜனநாயகப் படுகொலை’ எனக் கூறும் அரசியல் இயக்கங்கள், இங்குக் கல்வி உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களைக் காவல்துறையைக் கொண்டு அநாகரிகமாகத் தள்ளி, இழுத்து அமைதியாக்குகின்றன. இது அப்பட்டமான இரட்டை நிலப்பாடு.

நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், படத்தைப் பார்த்துவிட்டு அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கண்ணீர் விட்டு அழுவது எந்த வகையில் நியாயம்? எமோஷனலாக அரசு நிர்வாகம் செயல்படுவதை இது காட்டுகிறது.”

முக்கியப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் முயற்சி

“மின்சாரக் கட்டண உயர்வு, சொத்துவரி மற்றும் குடிநீர் வரி உயர்வு, குடிநீர் தட்டுப்பாடு எனப் பொதுமக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் கடுமையான சிக்கல்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த ‘ஜனநாயகன்’ கொண்டாட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன,” என்று கோட்டீஸ்வரன் அந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மீது பெண் பரபரப்பு புகார்: திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு!

MUST READ