எஸ்.ஐ.ஆர் பணிகளை திமுகவும் எதிர்க்கும் நிலையில, அதனை ஸ்டாலின் கொண்டுவந்தது போன்று விஜய் சித்தரிக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.


மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜக பீகார் தேர்தலில் இமாலய வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் வெற்றி பெற முயற்சிப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை பாஜகவுக்கு பெரிய அளவில் பலம் கிடையாது. அதனால், அதிமுகவை நம்பிதான் அவர்கள் தமிழ்நாட்டில் போட்டியிட முடியும். உதாரணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டால், அதிமுகவுக்கு தான் பின்னடைவு ஏற்படும். கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மோடியின் பேச்சு எடுபடலாம். ஆனால் அவர் ரோடு ஷோ சென்றால், அது திமுகவுக்கு பலமாகிவிடும்.
மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்பது திமுகவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத் தருவதாகும். அதை மையமாக வைத்து தான் திமுக கூட்டணி 2026 தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. தமிழ்நாட்டில் மக்களுக்கு மதத்தையும், மதவாதத்தையும் நன்றாகவே பிரித்துப் பார்க்க தெரியும். பகுத்தறிவு மிகுந்த தமிழ்நாட்டில் மோடி பிரச்சாரம் செய்வது சிக்கலாகும். எனவே அவர் கோவையில் குடும்ப அரசியல் குறித்தும் பேசவும், நலத்திட்டங்களையும் அறிவிக்கவும் செய்யலாம்.

திமுக தரப்பில் பிரதமர் மோடி வருகையால், அச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற தூங்கிக் கொண்டிருந்த துறைகள் எல்லாம் இனி விழித்துக்கொள்ளும். அப்போது தவறு செய்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். பிரதமர் மோடியின் வருகை என்பது தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்த பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், இனி ஆக்டிவ் மோடிற்கு வருவார்கள். பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை காரணமாக தான் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றதாக திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கினால், மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுவார்கள். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் களத்தில் உள்ளன. தவெக தலைவர் விஜயும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். எனவே தமிழ்நாட்டில் வாக்காளர்களை நீக்குவது சாத்தியமில்லாதது என்று தோன்றுகிறது.

திமுகவினர் புதிய வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வழங்கவில்லை என்பது வடிகட்டிய பொய். விஜய் அரசியலுக்காக அப்படி சொல்கிறார். அந்த விண்ணப்பங்களை வைத்து திமுகவினர் என்ன செய்யப் போகிறார்கள்? தவெகவினர் இதுதொடர்பாக ரீல்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள். எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் என்பது பிஎல்ஓக்களிடம் இருக்கும். அவர்களிடம் கேட்காமல் எதற்காக திமுகவினரிடம் சென்று கேட்கிறார்கள். இது விஷமத்தனமான பிரச்சாரமாகும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை திமுக எதிர்க்க தான் செய்கிறது. அதனால் தவெகவினரின் வாக்குகளை நீக்குவதால் அவர்களுககு எந்த பயனும் கிடையாது.
தேர்தல் ஆணையம் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று விஜய் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். தேர்தலில் குறிப்பிட்ட சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்குகளை வாங்கும் கட்சிக்கு தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சியே தற்போது தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகி உள்ளது. ஆனால் தேர்தலிலேயே போட்டியிடாத தவெக, தேர்தல் ஆணைய கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சொல்கிறது.

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். மக்களுடைய செல்வாக்கிற்கு முன்னால் தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று எதுவும் நிற்க முடியாது. சரி அவர் தேர்தல் ஆணையத்தை சந்தேகப்படுகிறார். அப்போது அதை வாயை திறந்து சத்தமாக சொல்வாரா ஆதவ் அர்ஜுனா? அவர் பேச மாட்டார். காரணம் தேர்தல் ஆணையத்தை தொட்டால் அவர்களின் ஓனர் பாஜக வந்துவிடும். எனவே அவற்றுக்கெல்லாம் பயந்துதான் அவர்கள் அரசியல் செய்கிறார்கள். அப்படி உண்மையிலேயே அவர்கள் பயப்படவில்லை என்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமருக்கு கருப்பு பலூன் விடுவார்களா?
அவர்களை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு என்பது எல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு தான். இனி விஜய் பாஜகவை எதிர்க்கவே வேண்டாம். கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சிபிஐ ஒரே அடியாக விஜயை பொளக்க போகிறார்கள். தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைளையும் ஆதாரங்களுடன் கொடுத்துவிடுவார்கள். விஜயிடம் கூட்டணிக்கு வர முடியுமா? இல்லையா? என்று கேட்பார்கள். அப்போது, நாங்கள் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம் என்று விஜய் சொல்ல முடியாது.

2026 தேர்தலுக்கு பாஜகவின் வியூகம் என்பது அவர்கள் போடுகிற டியூனுக்கு விஜய் ஆட வேண்டும் என்பதுதான். விஜய் 2வது இடத்திற்கு வந்ததற்கு பிறகு அவர்கள் வந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால், வருவதற்கு முன்னதாகவே அதிமுகவின் இடத்திற்கு தவெக வந்துவிடும் என்று பாஜக சொல்வதில் தான் சூட்சமம் உள்ளது. அப்படி சொல்வதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். அப்படி தவெக 2வது இரண்டாவது இடத்திற்கு வருகிறது என்றால்? திமுக தான் ஆட்சியில் இருக்கும். காரணம் தவெகவிடம் வெற்றி பெறுகிற எம்எல்ஏக்கள் கிடையாது. தற்போது தான் பல்வேறு இடங்களில் கிளைக் கழக நிர்வாகிகள் நியமித்துள்ளனர். இன்னும் சின்னம் பெற வேண்டும். வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். விஜய் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் இப்படி வேலையையும் செய்யாமல் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிறார்கள். அப்போது பாமக, நாதக, அதிமுக போன்ற கட்சிகள் சின்ன பசங்க போல கோலி விளையாடுவார்கள். புதிதாக வந்த நீங்கள் ஆட்சியை பிடித்துவிடுவீர்கள்? இப்படி ஒரு கட்சி பேசினால், ஒரு பத்திரிகையாளராக என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
