spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉச்சக்கட்ட திமிர் பேச்சு! நீங்க தான் தமிழ்நாடா? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

உச்சக்கட்ட திமிர் பேச்சு! நீங்க தான் தமிழ்நாடா? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் விவகாரத்தில் திமுக தன் மீது பழிசுமத்துவதாக கூறும் விஜய், சிபிஐ நெருக்கடி கொடுப்பதை மட்டும் திட்டமிட்டு கூறாமல் தவிர்த்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கூறியுள்ளார்.

we-r-hiring

வேலூரில் தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், என்னை விமர்சித்தால் தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதற்கு சமம் என்று சொல்வதெல்லாம் திமிர் பேச்சு ஆகும். எந்த தலைவரும் அப்படிபட்ட வார்த்தைகளை பயன்படுத்தியது கிடையாது. நீங்க யாரு சார்? உங்களை விமர்சிக்கவே கூடாதா? எனக்கு நிஜமாகவே புரியவில்லை. விஜய் அரசியல் செய்கிறாரா? அல்லது வேறு ஏதும் செய்கிறாரா? திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று சொல்வதை தன்னம்பிக்கை என்று வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், அடுத்தக்கட்டத்திற்கு தனிநபராக கொண்டுபோய் நிறுத்துகிறார். விஜய், தமிழ்நாட்டை தன்னோடு ஒப்பிடுகிறார். ஜெயலலிதாவே அப்படி சொன்னது இல்லை.  விஜய் தமிழ்நாட்டு மக்களை சென்டிமெண்ட் உணர்வுகளோடு பேசுவது தப்பு இல்லை. ஆனால் நான் தான் தமிழ்நாடு. என்னை விமர்சித்தால் தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதற்கு சமம் என்று பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. அல்லது திமிர்த்தனமானது.

இரண்டாவது கரூர் சம்பவம் குறித்து ரொம்ப நாட்களுக்கு பிறகு விஜய் பேசியுள்ளார். மிகவும் அபத்தாக பேசியுள்ளார். முதலமைச்சரையும், திமுகவையும் விமர்சிக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன. அதற்கு உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டு திமுகவை விமர்சிக்கலாம். கரூர் சம்பவத்தில் என் மீது திமுக பழிசுமத்துவதாக சொல்கிறார். விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது தவறுதான். சென்னையில் இருந்து நான் கிளம்புவதில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும். அதை புரிந்துகொள்ளாமல் என் மீது பழி சொல்லலாமா? என்று கூறியிருக்கலாம். ஆனால் அதைப்பற்றி நான் பேச மாட்டேன்.

என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்றால் திருப்பி திருப்பி நான் ஆயிரம் முறை கேட்கிறேன் நீங்கள் யார் சார்? உங்களை ஒன்றுமே கேட்கக்கூடாதா? இதற்கு பெயர் பழிசொல்வது இல்லையா? அது பழி இல்லை. தார்மீக பொறுப்பு. இந்த வழக்கு சிபிஐக்கு போன முதல் நாளில் இருந்து சொல்லி வருகிறேன். இது சிறையில் போடும் வழக்கு இல்லை. யாரையும் குற்றவாளி என்று சொல்ல முடியாது. ஒரு பொறுப்பை சுமத்துவதாக தான் இருக்குமே தவிர, வேறு எதுவும் பண்ண முடியாது.

ஆளுங்கட்சியை எதிர்த்து துணிச்சலுடன் விஜய் பேசுகிறபோது நான் பாராட்டினேன். ஆனால் நாளாக நாளாக நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை விமர்சிக்கவே கூடாது என்றால் உங்களுக்கு தலைக்கனம் ஏறிக்கொண்டே போகிறதே. இது திமிராக, ஆணவமாக பார்க்கப்படுமே. வளர்கிற தலைவருக்கு இது நல்லது இல்லையே. ரொம்ப சமீபத்தில் அண்ணாமலை உதாரணமாக இருக்கிறாரே. இந்த ஆட்டம் ஆடிய அண்ணாமலை இன்றைக்கு எங்கே இருக்கிறார்? திமுகவை விமர்சிப்பதாக இருந்தால் அர்த்தமுடன் விமர்சிக்க வேண்டும். கரூர் விவகாரத்தில் விஜய் மீது குற்றமே சுமத்தினாலும் தார்மிக பொறுப்புதான் கூற முடியும். அவரை குற்றம்சாட்ட முடியாது.

விஜயை டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. நேற்று வாய்கிழிய பேசிய விஜய், எனக்கு நெருக்கடி கொடுத்தால், அது தமிழ்நாட்டிற்கு கொடுத்த நெருக்கடி என்று ரெண்டு வார்த்தை சொல்லி இருக்க வேண்டும். இதை தான் விஜய் ஆபத்தானவர் என்று சொல்கிறோம். திட்டமிட்டே சில விஷயங்களை பேசாமல் இருந்துவிட்டு அதற்கு வியாக்கியானம் வேறு தருகிறார்.

வேலூர் கூட்டத்தில் பேசுகிறபோது கண்கலங்கினார். ஆனால் அவர் பேசிய விவகாரம் கண்கலங்குகிற அளவுக்கானது கிடையாது. நமக்கு தெரியாதா எதற்கு இயல்பாக கண் கலங்குவார்கள் என்று. அவர் நடித்தார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எதற்கு இந்த வேலை? பேச வேண்டிய விஷயத்தை பேசாமல், இப்படி ஏன் செய்ய வேண்டும். உங்களுக்கு கண் முன் இல்லாத அதிமுகவை ஏன் ஊழல் சக்தி என்று சொல்ல வேண்டும். விஜய் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கப் போகிறார். அவரை ஒரு தன்னிகரற்ற தலைவராக பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அது பிம்பத்தை எங்கோ ஒரு இடத்தில் போய் உயரத்தில் வைக்கப் போகிறார்கள். கடைசியில் விஜயே கீழே இறங்க நினைத்தாலும், இறங்க முடியாத வகையில் அந்தரத்தில் தொங்கப் போகிறார்.

அப்படி போக வேண்டிய நபர் அல்ல விஜய். தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு மாற்று தேவைதான். நாம் திருப்தி படுகிற அளவிற்காவது அந்த மாற்று இருக்க வேண்டும்.இதை அவர் உடல்மொழியிலும், வாய் மொழியிலும் காட்ட வேண்டும் என்று நாம் சொல்கிறோம். வீட்டை விட்டு அவரை வெளியே வரசொல்கிறோம். ஆனால் முதலமைச்சர் ஆனதும் கிராமம் கிராமமாக வருவதாக சொல்கிறார்.

முதலமைச்சர் திமுகவுக்கும், டெல்லிக்கும் தான் போட்டி என்பதாகவும், அவர் பிரதமர் தேர்தலுக்காக போட்டியிட போகிறார் என்றும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிற பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததும், அந்த வார்த்தைக்கு அர்த்தம் வந்துவிட்டது. ஒவ்வொருத்தரும் ஒரு நேரேட்டிவ் செட் செய்துகொண்டு போகிறார்கள். நீங்களும் ஒரு நேரட்டிவை செட் செய்து கொள்ளுங்கள். அதை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் 50 சதவீதம் நியமிப்போம் என்கிறார். அவருக்கு இங்குள்ள ஆட்சி அமைப்பு முறைகள் தெரியவில்லை. உங்கள் வார்த்தைகளின்படி முதலமைச்சராகினால் நீங்கள் தான் பொது நிர்வாகத்துறையை வைத்திருக்கப் போகிறீர்கள். அப்போது குறைந்தபட்சம் ஐஏஎஸ், ஐபிஎஸ் நியமனங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? நான் அதிகாரிகளை வைத்து ஆட்சி செய்வோம் என்கிறார்.

இத்தனை வருட அரசியல் அனுபவம் கொண்ட ஸ்டாலினே அதிகாரிகளின் பிடிக்குள் போய்விட்டார் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். அது தமிழ்நாட்டிற்கும் நல்லது அல்ல. விஜய்க்கும் நல்லது அல்ல. பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்வது ஸ்டாலினுக்கு சவால் விடுவதற்காக அல்ல. அவரை பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக தான். மக்களிடம் அவர் தன்னை ஒப்படைக்க வேண்டும். மனித வாடையே ஆகாது என்ற அளவுக்கு விஜய் போவது மிகவும் ஆபத்தானது. உங்களையும் பன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பின்னால் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நல்ல ஆலோசனைகளை சொல்லிக்கொடுங்கள் என்றுதான் விஜய்க்கு ஆலோசனை சொல்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ