அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தால் தான் முடியும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


அரசியல் விமர்சகர் பொன்ராஜ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளார். வல்லாதிக்க நாடான அமெரிக்கா, உலகத்தில் இருக்கும் வளங்களை சுரண்டி, அந்த நாடுகளை தனது வசமாக்கி, அல்லது தங்களுக்கு அடிமையாக இருக்கும் ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்து, நாட்டினுடைய வளங்களை சுரண்டுவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்காவின் ஆட்சியாளரான டிரம்ப் காலத்தில் அது அட்வான்ஸ் லெவலில் போய் ஈரானின் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி காமேனியை குடும்பத்துடன் கொலை செய்துள்ளார். இதில் இஸ்ரேலை, அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாக கத்தார், குவைத்,சவுதி அரேபியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் விமான தளத்தை அமைக்க ஒப்புக்கொண்டு, அமெரிக்காவின் அடிமைகளாக மாறிவிட்டனர். ஆனால் அதை எதிர்த்து போராடும் ஒரே நாடு ஈரான் மட்டும் தான்.

ஈரானில் எண்ணெய் வளம், தங்கம், அரிய கனிமங்கள் உள்ளிட்டவை உள்ளன. அந்த நாட்டின் சுய உரிமையை பாதிக்கும் வகையில், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து அதில் தோல்வி அடைந்தன. இஸ்ரேல் ஈரானுடன் மோதிய போது, அவர்களுடைய அயன் டோம் வான் பாதுகாப்பு அரணை தகர்த்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இனிமேல் விட்டால் இஸ்ரேலை தரைமட்டமாக்கி விடுவார்கள் என்கிற பயம் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் தொற்றிக்கொண்டது. இந்த நிலையில், ஈரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாகவும், இதை வைத்து அணு ஆயுதம் தயாரித்தால் இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியும் ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடத்துகிற போதே தாக்குதல் நடத்தினார்கள். எனவே இது திணிக்கப்பட்ட போர். அயத்துல்லா அலி கொமேனியை கொல்ல வேண்டும் என்று சிஐஏவும், மொசாட்டும் இணைந்து நடத்திய நாடகம். அந்த நாடகத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா உளவுத் தகவல்கள் மூலம் உதவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு போர் விமானங்களில், 30 பங்கர் பாம்களை வைத்து அடித்து அயத்துல்லா அலி கொமேனியை குடும்பத்துடன் அழித்துள்ளனர். இது ஒரு நீண்ட கால போர் விளைவுகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தும்.

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி 89 வயதாகினாலும் அவர் தைரியமுடன் இருந்துள்ளார். அவர் நினைத்திருந்தால் பல நூறு அடி ஆழத்திற்கு சென்று பதுங்கி இருக்கலாம். ஆனால் அவர் அச்சப்படவில்லை. அதற்கு காரணம் அவருக்கு தலைவரை தேர்வு செய்ய அவர்களிடம் திட்டம் தயாராக உள்ளது. காமேனி மறைந்தாலும் போரை தொடர்ந்து நடத்த இடைக்கால தலைமை கவுன்சில் என்ற ஒன்றை வைத்துள்ளனர். அதிபர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மதத் தலைவர்களில் ஒருவர் இடம்பெற்றுள்ள கவுன்சில் ஏற்படுத்தப்படும். அதன்படி கொமேனியின் மகன் அயத்துல்லா அலிரெசா இடைக்கால கவுன்சிலில் நியமிக்கப்பட்டுள்ளார். 88 பேரை கொண்ட மதத்தலைவர்கள் கூடி புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வார்கள். எனவே எத்தனை தளபதிகளை கொன்றாலும், அடுத்தடுத்து வரவேண்டிய தலைவர்கள் சரியாக உள்ளனர். அதனால் ஈரான் போரை தொடர்ந்து நடத்திச்செல்கிறார்கள். சவுதி அரேபியாவில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தையும், துபாயில் உள்ள அமேசான் தரவுகள் மையத்தை தாக்கியுள்ளனர். அமெரிக்க தளங்கள் எங்கே எல்லாம் இருக்கிறதோ அங்கே எல்லாம் ஈரான் இறங்கி அடிக்கிறது. இஸ்ரேல் மீதும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

ஈரானிடம், இஸ்ரேலிடம் இருப்பது போன்ற அதிநவீன போர் விமானங்கள் கிடையாது. ஆனால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் மிகவும் அட்வான்சாக உள்ளனர். டிரோன்களும் அதிகளவில் உள்ளன. இத்தனை தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் ஈரானுக்கு இருக்கும் சவால் அமெரிக்காவின் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப் பல்களையும் அழிக்க வேண்டும் என்பதுதான். அந்த கப்பல்களில் இருந்துதான் ஈரானின் ஆயிரம் இலக்குகளை தாக்கியுள்ளனர். இவை இரண்டையும் அடித்து நொறுக்கிவிட்டால் ஈரானுக்கு தான் வெற்றி. அதை நோக்கி தான் ஈரான் முயற்சிக்கும். அடுத்தபடியாக மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள அமெரிக்க விமான தளங்களை அழிக்காவிட்டால், அவற்றின் பொருளாதார மையங்களை தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்தால் அவர்களும் ஏர்பேஸை காலி செய்வார்கள். அப்படி செய்தால் அங்கே அமைதி திரும்பும். ஈரானிடம் உள்ள ஏவுகணைகள் 200 முதல் 2000 கிலோ மீட்டர் தொலைவுக்கும் செல்லக்கூடியதாகும். இவை தவிர்த்து ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹௌதி மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு அமைப்புகளை கொண்டும் தாக்குதல் நடத்துவார்கள். பல்வேறு நிலைகளில் ஈரான் தாக்குதல்களில் ஈடுபடும்.

இஸ்ரேலை பொருத்தவரை மத்திய கிழக்கில் அணு ஆயுதம் தயாரிக்கும் வல்லமை ஈரானுக்கு மட்டும் தான் உள்ளது. அவர்கள் தயாரித்தால் இஸ்ரேலை காலி செய்து விடுவார்கள் என்று நினைக்கிறது. எனவே ஈரானின் உச்ச தலைவரை கொன்றுவிட்டால் அவர்கள் அடங்கிவிடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் ஈரானிடம் நாட்டை வழிநடத்துவதற்கான திட்டம் இருந்ததால் தாக்குதல் தொடர்கிறது. இது இஸ்ரேலுக்கு பெருத்த ஏமாற்றம்தான். யுத்தத்தால் ஏற்பட பொருளாதார சுமைகள் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு பொருளாதார அழுத்தம் ஏற்படும். இந்தியாவுக்கு வரும் எண்ணெய் 80 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக தான் நடைபெறுகிறது. உலகிற்கு 20 சதவீதம் எண்ணெய் அங்கிருந்து வர்த்தகமாகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கத்தார், ஓமன், யுஏஇ போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் வருவது குறையும். இதனால் கச்சா எண்ணெய் விலை இரண்டு மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயரும். பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்த போரை நிறுத்த அமெரிக்கா, ரஷ்யா தலையிட்டால் தான் முடியும்.

ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் மரணத்திற்கு இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் காரணம். எனவே அவர்கள் இருவர் மீதும் ஈரான் இறங்கி அடிக்கும். போரை தொடங்கியது நீங்கள். ஆனால் போரை முடிப்பது எங்கள் கையில் தான் உள்ளது என்று ஈரான் சொல்லிவிட்டது. இது எங்கே போய் நிற்கப் போகிறது என்று தெரியவில்லை. ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். எவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வருகிறதோ அவ்வளவு தூரம் நல்லது. ஒன்று இஸ்ரேல் அழிய வேண்டும். அல்லது ஈரான் அழிய வேண்டும். எதாவது ஒன்று அழிய வேண்டிய சூழல் ஏற்படும். ஈரான் மதத் தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த போராட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக உலக நாடுகளின் தலைவர்கள் ஐ.நா, அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தால் தான் முடியும். இல்லாவிட்டால் ஈரான், சீனா, ரஷ்யா உதவியுடன் அமெரிக்காவின் தளங்களை தளங்களை அழித்தால் தான் முடியும். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடிவாளம் போட வேண்டிய இடத்தில் இங்கு யாரும் இல்லை. இந்தியாவை தவிர்த்து பிரிக்ஸ் நாடுகள் இணைந்தால் இதற்கு ஒரு முடிவு வரும். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுக்கு தாளம் போடுகிற நிலையில் இருப்பதால் அமெரிக்கா அப்பர் ஹேண்ட் எடுக்கும். அதை சரிசெய்ய ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகள் இறங்கினால் தீர்வு கிடைக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


