16. நமது வாழ்க்கையில் நாம் மட்டுமே கதாநாயகன் – என்.கே.மூர்த்தி
”வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் , வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி” – டாக்டர் அப்துல் காலம்
நிகழ்காலத்தில் கண்ணிற்கு முன் தோன்றுகின்ற பொருளை அனுபவிக்கும் போது, நிகழ்கால சிந்தனையில் வாழும் போது நமது மூளை ஒரு வித புத்துணர்ச்சியை பெருகிறது. அவையே எதிர்காலத்தைப் பற்றி நாம் கற்பனை செய்யும் போதும் புதிய மனிதராக நம்மை மாற்றுகிறது.
நிகழ்காலம் நிஜம். அந்த நிஜமான வாழ்க்கை சுகமானதாக இருக்கும். இந்த பூமிக்கு நாம் எதற்காக வந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? என்று தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்.
நாமும் பில்கேட்ஸை போன்ற அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய மனிதராக மாறலாம். நாமும் உலகத்திற்கு ஒரு புதிய தத்துவங்களை தரக்கூடிய காரல்மார்க்ஸாக கூட இருக்கலாம்.
நாமும் ஒரு புத்தனாக, ஒரு இயேசுவாக வாழலாம்.
நாமும் இந்த உலகத்தையே மாற்றி அமைக்கக் கூடிய ஒரு புரட்சியாளனாக் கூட வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நாம் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த பூமிக்கு வந்திருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. இதை அனைத்தையும் மறந்து விட்டு ஏற்கனவே வாழ்ந்து மறைந்த புராண, இதிகாச கதாநாயகர்களை பற்றி பேசி காலத்தை வீணாக்குகிறோம்.
கிருஷ்ணர், ஏசு, நபிகள் இன்னும் ஆயிரக் கணக்கான மகான்கள் அவர்கள் இந்த பூமிக்கு எதற்கு வந்தார்களோ அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டு, அவர்கள் சென்று விட்டார்கள்.
நாம் அவர்களின் கருத்தை பேசி நம்முடைய வாழ்க்கை எது என்று தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள். நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம்.
நமது வாழ்க்கை தனியானது, தனித்துவம் மிக்கது. நம் வாழ்க்கை யாருடைய வாழ்க்கையும் அல்ல. எவருடைய வாழ்க்கையும் நம்மால் வாழ முடியாது என்பதை தீர்க்கமாக முடிவு செய்வோம்.
இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை தற்போது நமது வாழ்க்கையோடு பொருத்தி பார்ப்பது பெரிய தவறானது. பொருத்தமற்றது !
நமது வாழ்க்கையை நாம் வாழ்வோம். வேறு எவருடைய வாழ்க்கையும் நமது வாழ்க்கையோடு பொருந்தாது என்பதை உறுதிப்படுத்துவோம்.
நமது வாழ்க்கையில் நாம் மட்டுமே கதாநாயகன் என்பதை முடிவெடுப்போம்.
விஞ்ஞானியாகவோ, எழுத்தாளனாகவோ, கோடீஸ்வரனாகவோ, புரட்சியாளனாகவோ, தத்துவ மேதையாகவோ எதுவாக நாம் மாறப்போகிறோம். அதுவாக கற்பனை செய்வோம். அதுவாகவே வாழ்ந்து காட்டுவோம்.
நாம் எவ்வாறு வாழ விரும்புகிறோமோ, இப்பொழுதே அதேபோல் வாழ்க்கையை தொடங்குவோம்.
நமது ஆழ்மனதில் பழைய காட்சிகளை பதிவு செய்திருப்போம். அதுவே மீண்டும் மீண்டும் நினைவில் வரும். பத்து நிமிடம் தியானத்தில் ஈடுபட்டாலும் மனம் ஒரு நிலையில் நிற்காது. மனதை ஒரு நிலைப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும்.
மனப்போராட்டங்களில் இருந்து தப்பிக்கவே எதை எதையோ தேடி ஓடுகிறோம். மனப்போராட்டங்களில் இருந்து தப்பிக்கவே கோயில் மற்றும் டாஸ்மாக் செல்கிறோம். மனதை கட்டுப்படுத்தி நிகழ்காலத்தில் வாழத்தெரிந்தவர்களுக்கு பயம் இருக்காது.
நிகழ்காலத்தில் வாழ கற்றுக் கொண்டவர்களுக்கு மனம் உறுதியானதாக இருக்கும். தடுமாற்றம் இருக்காது. அச்சம் இருக்காது. நம்பவே முடியாத அளவிற்கு அசாத்தியமான துணிச்சல் இருக்கும்.
நிகழ்காலம் நிஜமானது. நிஜத்தில் வாழ்கிறவர்களுக்கு பொய் சொல்ல வேண்டிய தேவை இருக்காது. நிஜத்துடன் வாழ்கிறவர்களின் வாழ்க்கையில் பிரச்சினை இருக்காது. அங்கே மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.
தொடரும்…