காமராஜர், அண்ணா, கலைஞர் என்று அனைத்து தலைவர்களும் மக்களோடு நின்று, எனக்கு வாக்குகளை தாருங்கள் என்று சொன்னார்கள். விஜய் அப்படி கேட்கிறாரா? என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது :- 2026 தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்பது உண்மைதான். இந்த தேர்தலில் நிச்சயமாக விஜய் கனிசமான வாக்குகளை வாங்குவார் என்பது கசப்பான உண்மை. பாஜகவால் தமிழ்நாட்டில் நேரடியாக காலூன்ற முடியாது. அதனால் தமிழ்நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் செய்து, அதன் மூலம் தமிழ்நாட்டிற்குள் காலூன்றலாம் என்று பெரும் சதித்திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி மதுரை வருகிறார். அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையப்படுத்தி ஒரு மாபெரும் அரசியலை இங்கே செய்ய உள்ளார். திருப்பரங்குன்றத்திற்கே செல்ல உள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒருவர் தற்கொலை செய்தபோது, அதை வைத்து அரசியல் செய்ய முயன்றவர்களை அந்த குடும்பத்தினரே விரட்டினர். அதேவேளையில் மோடி அந்த குடும்பத்தை சந்திக்க திட்டமிட்டால் என்ன ஆகும்? என்று யோசித்துப் பாருங்கள். திமுக அரசு மீண்டும் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்துவிட்டால், பாஜகவுக்கு ஆபத்து என்பதால் ஒரு பெரும் சதி வேலையை செய்கிறது. அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக விஜய் கணிசமான வாக்குகளை பிரிப்பார். அதனூடாக தமிழ்நாட்டிற்குள் ஸ்திரத்தன்மையான அரசு அமைவதை தடுக்க பாஜக ஒரு வேலையை தொடங்கியிருக்கிறது.

திரைப்பட நடிகர் அரசியலுக்கு வருவதில் தவறு கிடையாது. ஆனால் முதலமைச்சர் ஆவதற்கு அவர் என்ன செய்துள்ளார்? 1967 திரும்பும் என்று விஜய் சொல்கிறார். 1967இல் அண்ணா கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் முதலமைச்சர் கனவோடு திரைத்துறையில் இருந்து வரவில்லை. 1930-களில் பெரியாரை சந்தித்து பொதுவாழ்வுக்கு வந்தார் அண்ணா. சிறைவாசம், மொழிப்போராட்டம். 1949-ல் திமுக தொடங்கியதும் 1952 தேர்தலில் பங்கேற்கவில்லை. தேர்தலில் போட்டியிடலாமா? என்று தன்னுடைய சகாக்களிடம் கருத்துக்களை கேட்டபோது, தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொன்னார்கள்.
அதன்படி திமுக 1957 தேர்லில் போட்டியிட்டு 15 சட்டமன்ற உறுப்பினர்கள். 1962ல் 50 சட்டமன்ற உறுப்பினர்கள். 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. இத்தனை ஆண்டு காலமும் தமிழ்நாட்டிற்காகவும், தமிழ் மொழிக்காவும், தமிழ் மக்களுக்காகவும் தொடர் போராட்டம் நடத்தி எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று அண்ணா கேட்டார். அந்த வழியில் வந்தது திமுக.

விஜய் கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தீர்கள். வரும் இடைத்தேர்தல்களை எல்லாம் புறக்கணிக்கிறீர்கள். நேரடியாக நான் முதலமைச்சராக போய் உட்காருவேன் என்று நீங்கள் நினைத்தால், அது ஜனநாயகப் பூர்வமானதா? என்று தான் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். விஜய் பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற அரசியல் தலைவர்களை தூக்கிப்பிடிக்கிறார். ஆனால் களத்தில் உங்களுடைய செயல்பாடு என்ன? உங்கள் ரசிகர்களை, வாக்காளர்களாக மாற்ற வேண்டும் என்று நினைப்பது ஜனநாயகத்திற்கு செய்கிற துரோகமாகும்.
மறுபுறம் பாஜக திமுகவை இந்து விரோத கட்சியாக கட்டமைக்கிறது. ஜெயேந்திரரை கைதுசெய்த, கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடைவிதித்த ஜெலலிதாவை இந்து விரோதியாக கட்டமைக்க மாட்டார்கள். ஆனால் திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிப்பார்கள். அதற்கு காரணம் திமுக, ஆரியத்திற்கு விரோதி, பார்ப்பனிய சிந்தனையின் விரோதி. சமஸ்கிருத திணிப்புக்கு விரோதி. இதை நேரடியாக அவர்களால் சொல்ல முடியாது. எனவே இந்து எதிர்ப்பு என்று அதை மடை மாற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் இந்துக்கள் தங்கள் பின்னால் வருவார்கள் என்று நினைக்கிறார்கள்.

விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட பின்பு இங்கிருந்து புதிதாக தான் தொடங்க வேண்டும். தன்னுடைய திரைத்துறை பிரபலத்தை தூக்கி தூரப் போடுங்க. மக்களோடு நில்லுங்கள். மக்கள் பிரச்சினைக்காக போராடுங்கள். ஆனால் தன்னுடைய திரைத்துறை பிரபலத்தை வைத்துக்கொண்டுதான் முதலமைச்சர் நாற்காலியை நோக்கி நகர்வேன் என்று விஜய் சொன்னால், ஒருவேளை தமிழ் சமூகம் அதற்கு துணை போகுமே என்றால், அது ஜனநாயகத்திற்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாகும். விஜய் ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்வார் என்று சொல்கிறார்கள். அவர் ஆட்சியில் இல்லாத இந்த 2 ஆண்டுகளில் மக்களுக்காக என்ன போராட்டங்களை நடத்தினார் என்று பட்டியலிட சொல்லுங்கள். தந்தை பெரியார் தனது இறுதி மூச்சுவரை மக்களுக்காக நின்றார். தேர்தலில் தோற்ற போதும் கர்ம வீரர் காமராஜர் மக்களுக்காக நின்றார். மக்களுக்காக போராடினார்.
தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சியை கைப்பற்ற முடியாவிட்டாலும் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் கலைஞர் தொடர்ந்து போராடினார். 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லா விட்டாலும் ஸ்டாலின் வீட்டிலா முடங்கி கிடந்தார். ஒவ்வொரு வீதி வீதியாக நடந்தார். ஒவ்வொரு மக்கள் போராட்டத்திலும் முன் நின்றார். அனைத்து தலைவர்களும் மக்களோடு நின்று, எனக்கு வாக்குகளை தாருங்கள் என்று சொன்னார்கள். விஜய் அப்படி கேட்கிறாரா? என்று உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


