சென்னைக்கு விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.
இதைப் போன்ற விலங்குகள் உயிரினங்கள் இந்தியாவுக்குள் வருவதால் பல்வேறு விதமான நோய்க்கிருமிகள் இந்தியாவில் பரவும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு சமீப காலமாக தாய்லாந்து நாட்டில் இருந்து அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகள், உயிரினங்கள் கடத்தி வரப்படுகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் 30 -க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மாதத்துக்கு இரண்டு என்று, தாய்லாந்து உள்ளிட்ட வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை விலங்குகள், உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளும், வன உயிரென குற்ற பிரிவு அதிகாரிகளும், அவைகளை கண்டுபிடித்து, கடத்தல் ஆசாமிகளை கைது செய்வதோடு, கடத்தி வரப்பட்ட உயிரினங்களை மீண்டும் எந்த நாட்டில் இருந்து எந்த விமானத்தில் வந்ததோ, அதே நாட்டிற்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.
இதைப் போன்று வெளிநாடுகளில் இருந்து அரிய வகை, அபூர்வ உயிரினங்கள், விலங்குகள் இந்தியாவுக்குள் கடத்தி கொண்டு வரப்படுவதால், வெளிநாட்டில் உள்ள நோய்க் கிருமிகள், அந்த விலங்குகள் உயிரினங்கள் மூலமாக நம் நாட்டில் பரவும் அபாயம் உள்ளது. இதனால் விலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும், குறிப்பாக குழந்தைகள் முதியோர்கள் ஆகியோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நாடு முழுவதும் பல்வேறு விதமான நோய்கள், உடல் அரிப்புகள் உள்ளிட்ட பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.
எனவே இவைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது பற்றி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. இந்திய வன உயிரின குற்ற கட்டுப்பாடு கூடுதல் செயலாளர் கிரிஸ்ஷா தலைமையில், இந்த உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு அமைப்பு, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநகர போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பது, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக விலங்குகள், உயிரினங்கள் கடத்துவதை முழுமையாக தடுப்பது, அவ்வாறு கடத்தலில் ஈடுபடும் கடத்தல் ஆசாமிகள் மீது கடுமையான சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பது, உட்பட பல்வேறு பல்வேறு விதமான ஆலோசனையும், விவாதங்களும் நடந்தன.
மேலும் இதை போல் விலங்குகள், உயிரினங்கள் கடத்தப்படுவதை, முன்னதாகவே சுங்கத்துறையினர் மற்றும் அந்தந்த விமான நிறுவனங்களின் ஊழியர்கள் அறிந்து கொண்டு, அதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் உடைமைகளில் இதைப்போல் சட்ட விரோதமான உயிர் இனங்கள் எடுத்து வருகிறார்களா? என்பதை ரகசியமாக கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கொண்டு வரும் பயணிகளை, விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே தடுத்து விட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கு விமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.