பல்வேறு தடைகள், சென்சார் சிக்கல்கள் மற்றும் இணையதள கசிவு போன்ற விவகாரங்களை எதிர்கொண்டு வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என்று இயக்குனர் எச்.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள KVN தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குனர் எச்.வினோத், ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்தும், அதில் எழுந்த சர்ச்சைகள் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

’A’ சான்றிதழ் & சென்சார் சர்ச்சை
திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் ‘A’ சான்றிதழ் அளித்திருப்பது குறித்துப் பேசிய அவர், “படத்திற்கு ‘A’ சான்று வழங்கப்பட்டது தயாரிப்பாளருக்கும் எனக்கும் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அதை எதிர்த்துப் போராட தற்போது நேரமில்லை; படம் வெளியானால் போதும் என்ற சூழல் உள்ளது. சென்சார் வாரியம் குறித்துப் பேச நிறைய விஷயங்கள் உள்ளன. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது உண்மைதான், ஆனால் அதைப் பேசி நிரூபிக்க எங்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

படம் இணையத்தில் கசிந்த விவகாரம்
படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த இயக்குனர், நாங்களே படத்தை லீக் செய்தோம் என்று கூறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அரசியல் லாபத்திற்காகவே எங்கள் மீது இவ்வாறான பழிகள் போடப்பட்டன.இணையத்தில் கசிந்தபோதிலும் படத்தின் முன்பதிவு சிறப்பாக உள்ளது. விஜய் சார் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குத் தலைவணங்குகிறேன்.போலிச் செய்திகள் பரவுவது குறித்துக் குறிப்பிட்ட அவர், “உலக அளவில் பொய்யான செய்திகளை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமூக வலைத்தளங்களில் சாதி, மதம் குறித்துப் பரப்பப்படும் பொய்களைத் தடுக்க தனிச்சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.
முதலமைச்சர் விஜய் & சட்டமன்ற சைகை
முதலமைச்சர் விஜய் அவர்களின் பங்களிப்பு மற்றும் படத்தின் பின்னணி குறித்து விவரிக்கையில், “இந்தப் படம் 200 சதவீதம் விஜய் சாரின் படம். பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவருக்கு இருந்த அதிக ஈடுபாடு காரணமாகவே இக்கதையைத் தேர்ந்தெடுத்தார்.படத்தில் இடம்பெற்றுள்ள சைகை குறித்து எழும் கேள்விகளுக்கு, அவர் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே படத்தில் அச்சைகையைச் செய்து முடித்துவிட்டார். படத்தைப் பார்த்துவிட்டுத்தான் அவர் அதைச் செய்தார் எனக் கூற முடியும்” என்று விளக்கமளித்தார்.
”அரசியலுக்கு வரும் எண்ணமில்லை”
தான் அரசியலில் நுழைவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த எச்.வினோத், “அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் முன்னரே வந்திருப்பேன். எதிர்காலத்திலும் அதற்கு வாய்ப்பில்லை. அரசியலுக்கு வர உறுதியான மனநிலை தேவை, அது என்னிடம் இல்லை” என்று சிரித்தவாறே கூறினார்.மேலும், “படம் எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பது முக்கியமல்ல; மக்கள் படத்தைப் பார்த்து என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியம். வெறுப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் மீது யாரும் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்” என்று கூறித் தனது செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.
“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!
