படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத், “கரூரில் வைத்து ஜனநாயகன் படப்பிடிப்பு நடந்ததாகவும், அங்குப் பல கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அப்படியொரு சம்பவம் நடைபெறவே இல்லை. ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் ஊடகத்துறை, பொய்களை உருவாக்கி பரப்புவது அமைப்பையே சீர்குலைப்பதாக அமையும். இதுபோன்ற வதந்திகளால் குடும்பத்தினர் கூட கவலையடையும் சூழல் உருவானது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.


‘ஜனநாயகன்’ தணிக்கைச் சிக்கல்: நடந்தது என்ன?
படத்திற்கு ஏற்பட்ட தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) தாமதம் குறித்து விளக்குகையில்: முன்கூட்டியே விண்ணப்பம்: நடிகர் விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருப்பதால், படத்தின் தயாரிப்பு நேரத்தில் சிக்கல்கள் வரக்கூடும் என்பதை உணர்ந்து, வழக்கத்தை விட 20 நாட்களுக்கு முன்னதாகவே தணிக்கைக்கு விண்ணப்பித்தோம். கட்களும் முடக்கமும்: தணிக்கைக் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தேவையான மாற்றங்களைச் செய்தபோதிலும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி (Upload Window) திடீரென முடக்கப்பட்டது.
நீதிமன்றத்தை நாடிய காரணம்: படம் வெளியாகும் தேதி நெருங்கிய நிலையிலும் சான்றிதழ் அளிக்கப்படாமலும், விண்ணப்பம் நிராகரிக்கப்படாமலும் இழுபறி நீடித்ததால், வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உருவானது. “சென்சார் போர்டு அமைப்பால் எங்களுக்குப் பிரச்சனை இல்லை, அவர்களுக்கு அப்பால் உள்ள அழுத்தங்களே இதற்குக் காரணம்” என்றும் வினோத் சுட்டிக்காட்டினார்.
‘பகவந்த் கேசரி’ ரீமேக்கா?
‘ஜனநாயகன்’ திரைப்படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் தழுவலா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்: “இப்படம் 50% மட்டுமே ரீமேக் ஆகும்; மீதி 50% புதிய கதைக் களத்தைக் கொண்டது. மனிதனின் ‘பயம்’ (Fear) உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் மையக் கருத்தாக வைத்து, படத்தின் பிற்பாதியில் தீவிரமான அரசியலைப் பேசியுள்ளோம்” என்றார்.
நடிகர் விஜய்யும், தயாரிப்பாளரும் இந்த இக்கட்டான சூழலில் தனக்கு முழு ஆதரவாகவும் உறுதியாகவும் நின்றதாகத் தெரிவித்து இயக்குனர் ஹெச். வினோத் தனது நேர்காணலை நிறைவு செய்தார்.
