தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் படப்பிடிப்பின் போது அடுத்தடுத்து காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


பாலகிருஷ்ணாவுக்கு முழங்காலில் சிகிச்சை
நடிகர் பாலகிருஷ்ணா, கோபிசந்த் மலினேனி இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன்பு பங்கேற்றபோது, ஆக்ஷன் காட்சியில் பலத்த முழங்கால் காயம் அடைந்தார். அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, தற்போது அவர் நலமாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மருத்துவமனையில் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை
அதேபோல், ‘பெத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மணிக்கட்டு காயம் காரணமாக, நடிகர் ராம் சரண் சமீபத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவரும் தற்போது ஓய்வில் இருந்து விரைவாகக் குணமடைந்து வருகிறார்.
தோள்பட்டையில் காயமடைந்த ஜூனியர் என்.டி.ஆர்
இந்த நிலையில், பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் படப்பிடிப்பில் காயமடைந்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்குத் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை அவரை முழுமையாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ள அவரது குழு, “ரசிகர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை; ஜூனியர் என்.டி.ஆரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது” என விளக்கம் அளித்துள்ளது.
அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் காயமடைந்து வரும் நிலையில், அவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பிற்குத் திரும்ப வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
