மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சிப் பதிவு
இயக்குநர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு, விஜயும், லோகேஸ் கனகராஜூம் மீண்டும் இணைந்துள்ளதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், தங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை தான் அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், இதை வெளிப்படுத்த மில்லியன் நன்றிகளும் போதாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.