இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யா கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் இதே வேளையில் வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் புதிய படம் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது!
எழுத்தாளர் சிசு செல்லப்பாவின் சிறுகதையை தழுவிய திரைப்படம் ஆக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரவி வருகிறது. வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக இருந்த இந்த திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த படம் சில ஆண்டுக்கு முன்பே தொடங்க வேண்டியது ஆனால் பல்வேறு காரணங்களால் அது கிடப்பில் போடப்பட்டது. இந்தப் படத்திற்காக சென்னை இ சிஆர் கடற்கரையில் வாடிவாசல் போல் செட் ஒன்று அமைத்து அதில் படத்தின் ஒத்துகையும் நடத்தி பார்த்தனர் அதேபோல் நடிகர் சூர்யா தனது வீட்டில் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு மாடு ஒன்றும் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் சில ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 15 தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் அதில் “அகிலம் ஆராதிக்க “வாடிவாசல்” திறக்கிறது” என பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளது என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்தியாக சமூக வலைதளங்களில் வாடிவாசல் கைவிடப்பட்டதாக பரவி வருகிறது.
இதற்கிடையில் நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லுரியின் இந்த புதிய படத்துக்காக சூர்யா தனது தேதிகளை ஒதுக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.
இதனால், சூர்யா தற்போது வாடிவாசல் படத்திற்கு தேதிகள் ஒதுக்க இயலவில்லை எனவும், இதனையே காரணமாக வைத்து வாடிவாசல் படம் கைவிடப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இயக்குநர் வெற்றிமாறன், அதே தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.