பிரபல சீரியல் நடிகை, தனுஷுக்கு எதிராக பரவும் செய்திகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி வரும் தனுஷ் தற்போது ‘D54’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் இவர், ‘தேரே இஷ்க் மெய்ன்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய அளவில் பேசப்படுகிறது.
அதாவது தனுஷ் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அதற்காக தனஷுடன் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் சொன்னதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டியில் பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த், தனுஷின் மேனேஜர் மீது குற்றம் சாட்டியுள்ளார் என செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரில் மோசடி நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், ஸ்ரேயாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். எனவே தற்போது வெளிவரும் தகவலும் அதுபோல பொய்யானதாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அந்த சீரியல் நடிகையும் தனது தரப்பிலான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதன்படி அவர், “நான் அந்த வீடியோவில் சொன்னதை வைத்து சோசியல் மீடியா சேனல்கள் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்பதை கவனித்தேன். தயவு செய்து உண்மையான வீடியோவை பார்த்துவிட்டு எந்த முடிவையும் எடுக்கவும். அந்த வீடியோவில் நான் சொன்னது என்னவென்றால், என்னை தொடர்பு கொண்ட அந்த நபர் ஸ்ரேயாஸ் என்று சொல்லிக் கொள்ளும் போலி நபராக இருக்கலாம். அந்த நபரை தனுஷ் சார் டீமிடம் சொல்லி சரி பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறேன். ஆகையால் யாரும் தவறான செய்திகளை பரப்பாமல் ஒரிஜினல் வீடியோவை பார்த்து பின்னர் முடிவு செய்யுங்கள்” என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் வெளியாக இருக்கும் இந்த சமயத்தில் வேண்டுமென்றே சிலர் தனுஷுக்கு எதிராக வதந்திகளை பரப்புகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


