‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் விளக்க அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா குறித்து விமர்சனமாக அமைந்ததாக கூறப்பட்ட ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த காட்சியில், “போராடடா ஒரு வாளேந்தடா” பாடல் பயன்படுத்தப்பட்டதுடன், காப்புரிமை தொடர்பான சட்டப் போராட்டங்களை கிண்டல் செய்வது போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இளையராஜா ரசிகர்கள் மற்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் நோக்கமோ எங்களுக்குச் சிறிதளவும் இல்லை. எந்த உள்நோக்கமும் இன்றி அந்தக் காட்சி இடம்பெற்றது. அதனால் யாருடைய மனம் புண்பட்டிருந்தாலும் அதற்காக தாழ்மையுடன் வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி இனிவரும் திரைப்பட பதிப்புகளில் இருந்து நீக்கப்படும் என்றும் படக்குழு உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம், திரைப்படங்களில் கலைச்சுதந்திரம் மற்றும் காப்புரிமை விவகாரங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்
