இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தித் தொகுப்பு பின்வருமாறு,
”மண் ஈரம் காயும் முன் அடுத்த சோகம்”
பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆகும் நிலையில், அதற்குள் பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று வைரமுத்து தெரிவித்தார். “பாரதிராஜா மறைந்த மண் ஈரம் கூட இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜின் உடலுக்குத் தீ மூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அவர் கண்ணீருடன் குறிப்பிட்டார்.

பன்முகத் தன்மை கொண்ட கொங்கு மண்டலத்து நாயகன்
பாக்யராஜ் வெறும் நடிகன் மட்டுமல்ல, தனக்குள் பல அவதாரங்களைக் கொண்ட பன்முகத் தன்மை வாய்ந்தவர் என்று புகழாரம் சூட்டிய வைரமுத்து, “இவரைப் போல் கொங்கு மண்டலத்திலிருந்து இன்னொருவர் உருவாவதற்கு இன்னும் எத்தனை காலங்கள் ஆகுமோ தெரியவில்லை” என்றார்.
பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் இருவருக்குமான பிணைப்பு மிக ஆழமானது என்று குறிப்பிட்ட அவர், பாரதிராஜாவின் பிரம்மாண்ட வெற்றிக்கு பாக்யராஜின் மிக எளிமையான, நடைமுறைத் தமிழ் வசனங்களே முக்கியக் காரணம் என்றார். “பட்டிக்காட்டு இளைஞர்களும் படம் இயக்க முடியும் என்று காட்டியவர் பாரதிராஜா; ஆனால், சாதாரண மனிதர்களும் எழுத முடியும், நடிக்க முடியும் என்று சாதித்துக் காட்டியவர் பாக்யராஜ்” என்று இருவரின் பங்களிப்பையும் ஒப்பிட்டுக் பேசினார்.
பாடல் எழுதுவதில் பாக்யராஜின் பிடிவாதம்
பாக்யராஜின் ‘சுந்தரகாண்டம்’, ‘தூறல் நின்னு போச்சு’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல் எழுதிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட வைரமுத்து, “அவருக்குப் பாடல் எழுதுவது மிகக் கடினமான காரியம். அவர் மனதில் ஒரு பல்லவியை நினைத்து வைத்திருப்பார். அது கவிதையாக வரும் வரை நம்மை விடவே மாட்டார். ‘சுந்தரகாண்டம்’ படத்தை இயக்குவதற்காகவே அவர் சுந்தரகாண்டம் படிக்கக் கற்றுக்கொண்டார்” என்று அவரது அர்ப்பணிப்பைக் சுட்டிக்காட்டினார்.
ரிக்ஷா தொழிலாளி டூ சாதனையாளர்: வைரமுத்து நெகிழ்ச்சி
பாக்யராஜ் இன்று புகழின் உச்சத்தில் இருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. “அவர் வாழ்வில் பல மேடு பள்ளங்களைக் கடந்துள்ளார். சென்னையில் ஒருகாலத்தில் அவர் ரிக்ஷா ஓட்டியவர் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. அத்தனை கஷ்டங்களைச் சகித்துக்கொண்டுதான் இந்த உயரத்தைத் தொட்டார். பாரதிராஜா இறந்த பிறகு நானும் பாக்யராஜும் சுமார் 40 நிமிடங்கள் போனில் பேசினோம்” என்று உருக்கமாகக் கூறினார்.
தொடர்ந்த நன்றி உணர்ச்சி
பாக்யராஜுக்கு தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட வைரமுத்து, பாக்யராஜ் நடத்திய ‘பாக்யா’ வார இதழில் தான் எழுதிய “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” என்ற தொடரை நன்றியோடு நினைவு கூர்ந்தார். ”சென்னையிலிருந்து கிளம்பும் போதுதான் எனக்கு இந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது” என்று கூறிய கவிப்பேரரசு வைரமுத்து, பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
முந்தானை முடிச்சு – கே. பாக்கியராஜின் திரை ஆளுமையும் சமூகப் பார்வையும்
