தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செய்தியாளர்கள் சந்திப்பு
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேசன் சஞ்சய் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக முதலில் சேலத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், தற்போது தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

“அப்பா புரமோஷனுக்கு வர மாட்டார்” – ஜேசன் சஞ்சய் விளக்கம்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜேசன் சஞ்சயிடம், “உங்களது தந்தை, முதல்வர் விஜய் இந்தத் திரைப்படத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் கூறியதாவது, “அவரும் படத்தின் வெளியீட்டிற்காக மிகவும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.”
“ஆனால், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார். புரமோஷன் என்பது இந்தப் படத்தைப் பற்றியதாகவும், இதில் உழைத்தவர்களின் திறமையைப் பற்றியதாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை மற்ற விஷயங்களுடன் குழப்பிக் கொள்ள நான் விரும்பவில்லை.” “மேலும், அவர் தற்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்கு ஏராளமான மாநிலப் பொறுப்புகள் இருக்கின்றன. அவர் முதலமைச்சராகப் பதவியேற்றபோது நானும் என்னைச் சுற்றியுள்ள அனைவரும் பெரிதும் மகிழ்ச்சியடைந்தோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
குடும்பத்தினரின் ஆதரவும், எதிர்காலத் திட்டங்களும்!
தொடர்ந்து பேசிய அவர், தான் சினிமாவிற்குள் நுழைவது குறித்துத் தனது பெற்றோரிடம் பேசியபோது கிடைத்த வரவேற்பைக் குறிப்பிட்டார், “நான் முதன்முதலில் சினிமாவிற்குச் செல்லவிருப்பது குறித்து என் பெற்றோர், சகோதரி மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் பேசினேன். அவர்கள் அனைவரும் மிகுந்த நேர்மறையான (Positive) கருத்துகளையே தெரிவித்தனர். அது எனக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது. என் மீது அவர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தேன்.” “‘சிக்மா’ படப்பிடிப்பு தொடங்கியபோது, விஜய் சேதுபதி சார், சூரி சார் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் எனக்குத் தொலைபேசி வாயிலாகவும் நேரில் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தனர்.”

“‘சிக்மா’ படம் வெளியான பிறகு எனது அடுத்தக்கட்டப் பணிகள் தொடங்கும். ஏற்கனவே என் மனதில் இரண்டு அல்லது மூன்று நல்ல கதைகள் தயாராக உள்ளன. படம் ரிலீஸானதும் அந்தக் கதைகளை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்குவேன்” என்றும் ஜேசன் சஞ்சய் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ள ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராகக் களமிறங்கும் ஸ்டார் கிட் ஜேசன் சஞ்சயின் பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
