Homeசெய்திகள்சினிமாஸ்ரீதேவி சொத்து விவகாரம்: உச்சநீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது!

ஸ்ரீதேவி சொத்து விவகாரம்: உச்சநீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது!

-

- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமானதாக கூறப்படும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்து தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் மத்தியஸ்தம் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

we-r-hiring

சென்னை ECR பகுதியில் உள்ள 2.7 ஏக்கர் நிலத்தை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சொத்து தொடர்பாக எம்.சி. சிவகாமி மற்றும் எம்.சி. நடராஜன் ஆகியோர் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தங்களது தந்தையான சந்திரசேகரனுக்கு இந்த சொத்தில் பங்கு இருந்ததாகவும், அவருக்குத் தெரியாமல் அவரது சகோதரர்கள் சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு 1/5 பங்கு உரிமை இருப்பதாகவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உரிமைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்திரசேகரன் உயிருடன் இருந்த காலத்தில் இதுபோன்ற எந்த உரிமைக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், பழைய மற்றும் புதிய சர்வே எண்களில் வேறுபாடு இருப்பதாகவும், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் போனி கபூர் தரப்பு வாதிட்டது.

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் கீழமை நீதிமன்றத்தின் நடவடிக்கையை ரத்து செய்து, வழக்கை நிராகரிக்க உத்தரவிட்டிருந்தது. வழக்கு தொடரப்பட்ட காலதாமதம் உள்ளிட்ட காரணங்களையும் நீதிமன்றம் பரிசீலித்திருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாமி மற்றும் நடராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் ஆஜராகி, தங்களது தந்தைக்கு சொத்தில் 1/5 பங்கு இருந்ததாகவும், அவருக்குத் தெரியாமல் அவரது சகோதரர்கள் சொத்தை விற்றதாகவும் வாதிட்டார்.

இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், மனுதாரர்களுக்கு சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்பதால் சமரசத்திற்கு தங்களது தரப்பு தயாராக இல்லை என போனி கபூர் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மனுதாரர்களுக்கு சில உரிமைகள் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததாகவும், பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்தம் மூலம் உடன்பாடு ஏற்படாவிட்டால், போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. அடுத்த விசாரணை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிச்செழியன் இயக்கத்தில் உருவாகும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: நட்சத்திர பட்டாளத்துடன் அதிரடித் திரில்லராக தயாராகும் புதிய படம்!

MUST READ