ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது உயர் மின் அழுத்த மின்கம்பி மோதியதில், மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். பர்கூர் மலைப்பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள நெய்க்கரை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.


கரும்பு லாரியில் பாய்ந்த மின்சாரம்
எடப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராஜ் என்பவர், கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதிக்கு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நெய்கரைப் பகுதியில் வந்தபோது, சாலையோரம் சென்ற உயர் மின் அழுத்த கம்பி எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அதில் லாரி மீது மின்சாரம் பாய்ந்ததில், ஓட்டுநர் கோவிந்தராஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு மற்றும் விசாரணை
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பர்கூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
