கோவையில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், புறநகர் பகுதிகளில் தனி வீடு எடுத்துத் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களின் அறைகளில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் கொலைச் சம்பவங்கள்: கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவமும், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்பவர் கத்தி மற்றும் சுத்தியலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோவையில் ஏழு கொலைகள் அரங்கேறியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
போலீசாரின் அதிரடி ரெய்டு: மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், நேற்று ஒரே நாளில் 202 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கோவில்பாளையம், சூலூர் மற்றும் செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் அறைகளில் இன்று அதிகாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்: செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 130-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மாணவர்களின் அறைகளிலிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 2 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஆவணங்கள் மற்றும் வாகனப் பதிவு எண் இல்லாத 10 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் ஆயுதங்களும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள இந்தச் சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே சீலை உடைத்து ரொக்கம், லேப்டாப் திருடிய மெடிக்கல் உரிமையாளர் கைது!
