தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆவின் நிறுவனம் நெய், வெண்ணெய், மைசூர்பாக் உள்ளிட்ட பால் உபபொருட்களின் விலையை உயர்த்தியிருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், பண்டிகைக் காலத்தில் ஆவின் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பலகாரங்கள் தயாரிப்பதில் சிக்கல்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் முறுக்கு, அதிரசம், லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமூன் உள்ளிட்ட பல்வேறு பலகாரங்களைத் தயாரிப்பது வழக்கம். குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் பலகாரங்கள் செய்து வழங்குவது பண்டிகையின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், தற்போது நெய், வெண்ணெய் போன்ற பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தீபாவளிக்குத் தேவையான பலகாரங்களைத் தயாரிப்பதற்கான செலவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“குழந்தைகளுக்குப் பலகாரம் செய்து கொடுக்க முடியவில்லை”
திருவண்ணாமலையைச் சேர்ந்த இல்லத்தரசி பிரபாவதி கூறுகையில், “தீபாவளிக்குக் குழந்தைகளுக்குப் பலகாரம் செய்து கொடுக்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு என்ன சிற்றுண்டி செய்து கொடுப்பது என்றே தெரியவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் குடும்பத்தை நடத்துவதே சிரமமாக உள்ளது.
குழந்தைகளுக்குத் தினமும் இரண்டு வேளை பால் அல்லது காபி கொடுத்து வந்தோம்.
ஆனால், விலைவாசி உயர்வால் அதைக்கூடக் குறைத்துக்கொண்டு ஒரு வேளையாக மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இத்தகைய சூழலில், தீபாவளிப் பண்டிகைக்காகக் கூடுதலாகச் செலவு செய்வது எப்படி என்று தெரியவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.
குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிப்பு
பண்டிகைக் காலங்களில் குடும்பங்களின் செலவுகள் இயல்பாகவே அதிகரிக்கும். புத்தாடைகள் வாங்குவது, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிப்பது, உறவினர்களுக்குப் பரிசுகள் வழங்குவது எனப் பல்வேறு செலவுகள் ஏற்படும். இதற்கிடையே பால் உபபொருட்களின் விலை உயர்வு, நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயர்வால், அன்றாடத் தேவைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகக் கூறும் இல்லத்தரசிகள், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஆவின் பொருட்களின் விலை உயர்வை மறுபரிசீலனை செய்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்குத் தேவையான சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உத்திரமேரூர் தொகுதியில் தவெக நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு – சாலையில் போராட்டம்!
