உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு தடையற்ற தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வரிசை வளாகங்களை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பக்தர்கள் நேரில் முறையீடு
இந்த ஆய்வின்போது, கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளையும் புகார்களையும் நேரில் தெரிவித்தனர். முக்கியமாக, விஐபி (VIP) மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வருகை காரணமாக, பொது வழியில் வரும் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரமாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகக் குற்றம்சாட்டினர். விஐபி தரிசனத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால், சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் தாமதமாவதாகக் கூறிய பொதுமக்கள், அனைவருக்கும் விரைவான தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் புகார்களைப் பொறுமையுடன் கேட்டறிந்த அமைச்சர் ரமேஷ், பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்யுமாறு கோயில் அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டார். மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் விஐபி தரிசன முறைகளை முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பக்தர்களிடம் உறுதி அளித்தார்.
