இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘டோரதி’யின் (Dorothy) இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ என்ற இசை வீடியோவை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். 
ரசிகர்களைக் கவர்ந்த ‘டோரதி’ திரைப்படப் பாடல்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைப் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘டோரதி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதற்கட்டமாக வெளியான ‘கல்யாண விருந்து’ பாடல் ஏற்கனவே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலானது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ‘முத்துமணி’ என்ற மெல்லிசைப் பாடல் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு இசைஞானி இளையராஜாவே வரிகள் எழுதி, இசையமைத்துத் தனது காந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மியூசிக் வீடியோவில் சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா
இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கும் திரைப்படப் பாடல்களின் வீடியோக்களில் தோன்றி நடிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். அந்த வகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ள இந்த ‘முத்துமணி’ வீடியோ பாடலில் அவரே நேரடியாகத் தோன்றி நடித்துள்ளது அவரது ரசிகர்களுக்கும் திரை உலகினருக்கும் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
முதல்முறை கூட்டணி – செப்டம்பர் 25-இல் உலகளாவிய ரிலீஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ், முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்திருக்கும் படம் என்பதால் ‘டோரதி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இசை ரசிகர்களையும் சினிமா பிரியர்களையும் பெரிதும் கவர்ந்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
