போலி ஆவணங்கள், மோசடி அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டுகளைப் பெறுவது, தொலைத்தொடர்பு அடையாளங்களை தவறாகப் பயன்படுத்துவது மற்றும் மொபைல் போன்களின் IMEI எண்ணை மாற்றுவது உள்ளிட்ட செயல்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) எச்சரித்துள்ளது.


தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் இத்தகைய விதிமீறல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 சிம் கார்டுகள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்பட்ட சம்பவம்
சத்தீஸ்கரில் நடைபெற்ற சமீபத்திய இணையவழிக் குற்ற விசாரணையில், ஒரு சிம் கார்டு விற்பனை மைய (PoS) முகவர், பொதுமக்களின் அடையாள ஆவணங்களை அவர்களுக்குத் தெரியாமலும், அனுமதி பெறாமலும் பயன்படுத்தி 25 மொபைல் இணைப்புகளை சட்டவிரோதமாக செயல்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த PoS முகவரை தொலைத்தொடர்பு துறையும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளன. அந்த 25 மொபைல் எண்களும் டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் பிளாட்ஃபார்ம் (DIP) மூலம் ஆய்வு செய்யப்பட்டு, சந்தேகத்திற்குரிய எண்களுக்கு மறுசரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. சரிபார்ப்பில் தோல்வியடைந்த இணைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.
போலி ஆவணத்தில் சிம் வாங்கினால் என்ன ஆகும்?
போலி ஆவணங்கள், மோசடி, ஏமாற்றுதல் அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டு அல்லது தொலைத்தொடர்பு அடையாளங்களைப் பெறுவது சட்டவிரோதம் என தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றியமைப்பது, குறிப்பாக IMEI எண்ணை சேதப்படுத்துவது அல்லது மாற்றுவது தொடர்பான செயல்களும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவை.
உங்கள் பெயரில் உள்ள சிம்மை மற்றவர்களிடம் கொடுக்காதீர்கள்!
பொதுமக்கள் தங்களது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்வது, வாடகைக்கு விடுவது அல்லது பயன்படுத்துவதற்காக ஒப்படைப்பதைத் தவிர்க்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
தங்களது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு பின்னர் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், அந்த இணைப்பின் அசல் சந்தாதாரருக்கும் சட்டரீதியான பொறுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக துறை எச்சரித்துள்ளது.
சஞ்சார் சாதி மூலம் சிம் எண்களை சரிபார்க்கலாம்
தங்களது பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்கள் சஞ்சார் சாதி (Sanchar Saathi) இணையதளம் மற்றும் செயலி மூலம் சரிபார்க்கலாம்.
தங்களுக்கு தெரியாத அல்லது தேவையில்லாத மொபைல் எண்கள் இருந்தால் அவற்றை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். மேலும், மொபைல் போனின் IMEI எண்ணைப் பயன்படுத்தி அதன் உண்மைத்தன்மையையும் சரிபார்க்கும் வசதி சஞ்சார் சாதியில் உள்ளது.
மக்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தல்கள்
போலி ஆவணங்களில் சிம் கார்டு பெறுவது, மாற்றப்பட்ட IMEI கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவது, சிம் பாக்ஸ் போன்ற சாதனங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது மற்றும் தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றும் செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இணையவழி மோசடிகளில் தொலைத்தொடர்பு இணைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பகீர்! மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை சுட்டுக்கொலை
