
சாதாரண நோய்த் தொற்றுகள் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வரை உயிர்காக்கும் கவசமாகச் செயல்பட்டு வரும் ஆன்டிபயாடிக் மருந்துகள், தங்களின் செயல்திறனை வேகமாக இழந்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது .
நாடு தழுவிய ஆய்வறிக்கையின் அதிர்ச்சித் தகவல்கள்
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு கண்காணிப்பு ஆய்வறிக்கையில், சாதாரண பாக்டீரியாக்கள் கூட வழக்கமான ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் எதிர்ப்புச் சக்தியை (Antibiotic Resistance) வளர்த்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 30 பெரிய சிறப்பு மருத்துவமனைகள், 12 மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட 34 சிறிய மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட 1,03,000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மருந்துகளுக்குக் கட்டுப்படாத முக்கியத் தொற்றுகள்
ஈகோலை (E. coli): சிறுநீரக மற்றும் குடல் தொற்றுகளை ஏற்படுத்தும் ஈகோலை பாக்டீரியாக்களில், வெறும் 9 விழுக்காடு மட்டுமே சிப்ரோபிளாக்சின் (Ciprofloxacin) மருந்துக்கும், 18.4 விழுக்காடு மட்டுமே செபோடாக்சின் (Cefotaxime) மருந்துக்கும் கட்டுப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கார்பெனம் செயல்திறன் குறைவு: நிமோனியா மற்றும் இரத்தத் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிப்பதில் சக்தி வாய்ந்த கார்பெனம் (Carbapenem) மருந்துகள் 40 விழுக்காட்டுக்கும் குறைவாகவே செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளைத் தாக்கும் 91.1 விழுக்காடு பாக்டீரியாக்கள் கார்பெனம் மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை என்பது கவலையளிக்கும் தகவலாக உள்ளது.

வயிற்றுப்போக்கு மற்றும் பிற தொற்றுகள்: வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ஷிகல்லா (Shigella) மற்றும் ஈகோலை பாக்டீரியாக்களை எதிர்ப்பதில் சிப்ரோபிளாக்சின் போன்ற மருந்துகள் மிகக் குறைவாகவே எதிர்வினை ஆற்றுகின்றன. அதேநேரம், டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்தும் சால்மோனெல்லா டைபி (Salmonella Typhi) பாக்டீரியா அசித்ரோமைசின் மற்றும் செப்ட்ரியாக்சோன் ஆகிய மருந்துகளுக்குக் கட்டுப்படுவது ஓரளவு ஆறுதல் அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்: பிறந்த 28 நாட்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரத்தத் தொற்றுகளை ஏற்படுத்துவதில் 25.1 விழுக்காடு காரணமாக இருக்கும் கிளப்சியல்லா (Klebsiella) பாக்டீரியா வழக்கமான ஆன்டிபயாடிக்குகளுக்குக் கட்டுப்படாததால், குழந்தைகளின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் :
ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பிறகே சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
