Homeசெய்திகள்துரோகத்திலிருந்து தப்பித்துவிட்டோம்; காமராஜர் ஆட்சியே எமது இலக்கு! – காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு

துரோகத்திலிருந்து தப்பித்துவிட்டோம்; காமராஜர் ஆட்சியே எமது இலக்கு! – காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு

-

- Advertisement -

“திமுகவின் துரோகத்திலிருந்து தற்போது தப்பித்து வந்துள்ளோம். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவதே காங்கிரஸ் கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.துரோகத்திலிருந்து தப்பித்துவிட்டோம்; காமராஜர் ஆட்சியே எமது இலக்கு! – காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுப் பேசிய அவர், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வி, திமுகவுடனான கூட்டணி அனுபவம், ராகுல் காந்தியின் அரசியல் முடிவுகள் மற்றும் முதலமைச்சர் விஜய்யுடனான கூட்டணி உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

we-r-hiring

அறந்தாங்கி தொகுதியில் திமுக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக் கட்சியாக மதித்து உண்மையாகப் பணியாற்றியதால் 65 ஆயிரம் வாக்குகள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

ஆனால், திமுகவின் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர், மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டினார். இதுபோன்ற செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தற்போது அந்தத் துரோகத்திலிருந்து நாங்கள் தப்பித்து வந்துள்ளோம். அதில் எனக்கு மகிழ்ச்சியே” என்றும் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் முடிவைத் தடுத்ததாகத் தகவல்

தேர்தலுக்கு முன்பே கூட்டணி தொடர்பாக ராகுல் காந்தி ஒரு முடிவை எடுத்திருந்ததாகத் தெரிவித்த திருநாவுக்கரசர், தன்னைப் போன்ற 40 தலைவர்கள் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதால், அப்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

அன்று தாங்கள் தடுக்காமல் இருந்திருந்தால், ராகுல் காந்தி கூட்டணி தொடர்பாக வேறு முடிவை எடுத்திருப்பார் என்றும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 50 எம்.எல்.ஏ.க்கள், 6 அல்லது 7 அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர் பதவிகூட கிடைத்திருக்க வாய்ப்பிருந்ததாகவும் தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். அப்போது காங்கிரஸ் வேறு முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், பின்வாசல் வழியாக பாஜக ஆட்சிக்குள் வந்திருக்கும் என்றும், மீண்டும் தேர்தல், ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுக பாஜக ஆட்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே ராகுல் காந்தி ராஜதந்திரமான முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

விஜய் – ராகுல் காந்தி நட்பு பழையது

முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல் காந்தி இடையிலான நட்பு குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், இது தற்போது உருவான நட்பு அல்ல என்று குறிப்பிட்டார்.

விஜய் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய காலத்திலேயே ராகுல் காந்தியைச் சந்தித்ததாகவும், அப்போதிருந்தே இருவருக்கும் இடையே நட்பு தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துவதாகவும் கூறிய திருநாவுக்கரசர், முதலமைச்சர் விஜய் அந்தப் பிரச்சினைகளை கவனத்துடன் பரிசீலித்து, எதிர்காலத்தில் சிறு தவறுகள்கூட நிகழாத வகையில் சிறப்பான ஆட்சியை வழங்குவார் என காங்கிரஸ் நம்புவதாகத் தெரிவித்தார்.

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்

அரசியல் இலக்குகள் குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், “இன்று முதலமைச்சராக இருக்கும் விஜய்யை அவரது கட்சியினர் பிரதமர் என்று அழைக்கிறார்கள். எம்.எல்.ஏ. கூட இல்லாத கட்சியினரே தங்களை முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்ளும்போது, முதலமைச்சராக இருப்பவரைப் பிரதமர் என்று சொல்வதில் நாம் கோபப்படத் தேவையில்லை. நமது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் எந்தச் சமரசமும் சந்தேகமும் இல்லை” என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் என்றாவது ஒருநாள் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“அவர்கள் விஜய்யைப் பிரதமர் என்று சொல்லும்போது நாம் கோபித்துக் கொள்ளாதது போல, நாம் வருங்கால முதலமைச்சர் என்று சொல்வதை அவர்களும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இரு கட்சிகளும் அந்நியோன்யமாகப் போட்டி போட்டுக்கொண்டு வளர வேண்டும். அதன் மூலம் நாட்டு மக்களும் வளர வேண்டும்” என்றும் திருநாவுக்கரசர் தனது உரையில் குறிப்பிட்டார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பயிற்சி முகாமில் திருநாவுக்கரசர் பேசிய இந்தக் கருத்துகள், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால அரசியல் இலக்கு மற்றும் தற்போதைய கூட்டணி உறவு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

MUST READ