சோத்துப்பாறை அணையிலிருந்து அரசு அதிகாரிகள் இல்லாத நிலையில் தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதாகவும், காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் சென்று பெண் காவலர்களை மிரட்டும் வகையில் அமைச்சர் ஒருவர் ஆய்வு நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, அரசு அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதுடன், அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சரின் செயல்பாடும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்துடனும், பொதுமக்களின் பாதுகாப்புடனும் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகள் திறப்பதற்கும், நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து ஆய்வு என்ற பெயரில் காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரீல்ஸ் மோகத்தில் அரசு நிர்வாகம் பாதிக்கப்படுகிறதா?
நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ் என சமூக வலைதள வீடியோக்கள் மூலமாகவே ஆட்சிக்காலத்தை நடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் இருப்பதாக விமர்சித்துள்ள தினகரன், தவெக நிர்வாகிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் அக்கட்சியினரிடம் ரீல்ஸ் மோகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
உள்ளூர் பிரச்சினைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது முதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் அதிகார வரம்பை மீறிப் பங்கேற்பது வரை தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கட்சித் தலைமை கண்டிக்கத் தவறியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி தண்ணீர் திறந்துவிடும் அளவுக்குப் பொறுப்பற்ற செயல்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு நிர்வாகம் என்பது அவரவர் விருப்பப்படி செயல்படும் சினிமா படப்பிடிப்புத் தளம் அல்ல என்றும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சமூக வலைதளங்களில் புகழ் தேடுவதற்கான மேடைகள் அல்ல என்றும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை உணர்ந்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய்யைக் கேட்டுக்கொள்வதாக தனது அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
