Homeசெய்திகள்திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அதிர்ச்சி –...

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அதிர்ச்சி – சிறுபான்மையினர், ஜனநாயக சக்திகள் அமைதி காக்க வேண்டுகோள்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். மேலும், சிறுபான்மையினரும் ஜனநாயக சக்திகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அதிர்ச்சி – சிறுபான்மையினர், ஜனநாயக சக்திகள் அமைதி காக்க வேண்டுகோள்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றத்தில் இதுவரை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்டு வந்த தீபத்தை, சர்ச்சைக்குரிய எல்லைத்தூணில் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு தற்போது உச்சநீதிமன்றம் இந்த ஆண்டுக்கு மட்டும் தற்காலிக அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களும், சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக ஆட்சியாளர்களும் மரபுகள் மீறப்படக் கூடாது என்பதிலும், சமூக ஒற்றுமை சீர்குலையக் கூடாது என்பதிலும் அக்கறை காட்டி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில பத்தாண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக அரசுகளும் இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் குறித்து வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இடைக்கால உத்தரவாக இருந்தாலும், இதையே முன்மாதிரியாகக் கொண்டு இனிவரும் ஆண்டுகளில் உரிமை கோருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் என்பது மக்களின் ஒற்றுமை மற்றும் தேசத்தின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புமிக்க அமைப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், பாபர் மசூதி தீர்ப்பு முதல் தற்போதைய திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பான தீர்ப்பு வரை, இத்தகைய தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றனவா அல்லது அரசியல் அழுத்தங்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றனவா என்ற விவாதங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முருகப் பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் அப்பகுதி முஸ்லிம்கள் உறுதியாக இருப்பதாகவும், பக்தியுடன் வழிபட வருபவர்கள் உண்மையான பக்தர்கள் என்றும், அவர்கள் மதவாதிகளோ அரசியல்வாதிகளோ அல்லர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களின் பின்னணியையும் கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், மத வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்படுபவர்கள் என்றும், அயோத்தியைப் போலத் திருப்பரங்குன்றத்தையும் பயன்படுத்தி பிரிவினை அரசியலை வளர்க்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள சில அமைப்புகளின் இடிப்பு பட்டியலில் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவும் இருப்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாகத் திகழும் பூமி என்று குறிப்பிட்டுள்ள தமிமுன் அன்சாரி, கோயில்கள் கட்ட முஸ்லிம்களும், பள்ளிவாசல்கள் கட்ட இந்துக்களும் நிலம் வழங்குவதும், ஒருவருக்கொருவர் உதவுவதும் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் நடைமுறை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கச் சிலர் முயற்சிப்பதாகவும், அதற்கு தமிழ்நாடு பலியாகிவிடக் கூடாது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போதைய உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலையில் பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் எதிர்த்ததையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் ஒன்றிய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்ததையும் தனது அறிக்கையில் ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழலில், முஸ்லிம்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டிய நேரம் இது என்று வலியுறுத்தியுள்ள அவர், பெரும்பான்மை இந்து சமூக மக்களின் அன்பும், அக்கறையும், ஆதரவும் தங்களுடன் இருப்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, மதச்சார்பற்ற, சமூகநீதி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இந்த விவகாரத்தை நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வே கல்லா, தீபத்தூணா என்பதை இறுதி செய்யாமல் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதியா? – உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

MUST READ