டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே நேரில் சந்தித்துப் பேசினார். மேலும், நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சிகள் பேரணிக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற சந்திப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்தச் சூழலில், டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் மம்தா பானர்ஜியை அபிஜித் தீப்கே சந்தித்தார்.
தங்களது இளைஞர் இயக்கத்தின் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக மம்தா பானர்ஜிக்கு அவர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஜந்தர் மந்தரில் நடைபெற்ற முதல் போராட்டத்தின்போதும், தங்கள் அமைப்பின் நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டபோதும் ஆதரவு அளித்ததை நினைவுகூர்ந்தார்.
இந்தியா கூட்டணி பேரணிக்கு ஆதரவு; ஆனால் பங்கேற்க மாட்டோம்!
நவம்பர் 1ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்த அபிஜித் தீப்கே, தங்களது அமைப்பு நேரடியாகப் பேரணியில் பங்கேற்காது என்றும் தெளிவுபடுத்தினார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனித்துவமான மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகத் தொடர்ந்து செயல்பட விரும்புவதாகவும், அந்த அடையாளத்தைப் பாதுகாக்கவே பேரணியில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் தங்களது ஆதரவு இருக்கும் என்றும் கூறினார்.
இளைஞர்களைப் பாராட்டிய மம்தா பானர்ஜி!
அபிஜித் தீப்கே மற்றும் இளம் போராட்டக்காரர்களின் முயற்சிகளை மம்தா பானர்ஜி வெகுவாகப் பாராட்டினார். இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த இயக்கத்தின் முயற்சிகள் பெருமைக்குரியவை என்றும் தெரிவித்தார்.
மேலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கு வங்கத்திற்கு வந்து போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி பேரணி!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடைபெற உள்ளது.
இந்தப் பேரணிக்கு அபிஜித் தீப்கே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரது அமைப்பு தனித்துவமான அடையாளத்துடன் செயல்படும் என்றும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம்: 10,000 போலீசார் குவிப்பு; தலைநகரில் பலத்த பாதுகாப்பு!
