ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 30) அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் அதிகாலை 1.00 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
அரியானாவிலும் நில அதிர்வு
இதனைத் தொடர்ந்து, அரியானா மாநிலத்தின் பல்வால் பகுதியில் அதிகாலை 1.35 மணியளவில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பரிதாபாத் நகருக்கு தென்மேற்கே சுமார் 31 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை
இரு மாநிலங்களிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியிலும் அதிகாலை 5.14 மணியளவில் 2.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக மலைப்பகுதி மற்றும் எல்லையோர மாவட்டங்களில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கம் தொடர்பான நிலவரங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
