ஆந்திரப் பிரதேச மாநிலத்தைத் தாக்கிய ‘அர்னாப்’ மிகத் தீவிர புயலால் குறைந்தது ரூ.4,600 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும்போது இந்த இழப்பு மதிப்பீடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.


டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள கச்சகாயல போரா கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
மத்திய குழு ஆய்வு செய்ய உறுதி
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், தற்போதைய நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்ததாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதையடுத்து, பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதாக அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும், புயல் சேதங்கள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையையும் ஆந்திர அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
தென்னை, பனை மரங்களுக்கு இழப்பீடு
புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வேரோடு சாய்ந்த ஒவ்வொரு தென்னை மற்றும் பனை மரத்திற்கும் தலா ரூ.1,500 இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், நிவாரண முகாம்களில் இருந்து வீடு திரும்பும் மக்களுக்கு 25 கிலோ அரிசி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரொக்கத் தொகை அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், விளைச்சல் பாதிப்பால் ஏற்படும் இழப்புகள் ஈடுசெய்யப்படும் என்றும், விவசாயிகள் நஷ்டமடையாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் கணக்கிடப்பட்டு, விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
7 பேர் உயிரிழப்பு; 8,000 மின் கம்பங்கள் சேதம்
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதிலும், அர்னாப் புயலால் 7 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக கோனசீமா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கோனசீமா மாவட்டத்தில் மட்டும் சுமார் 8,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மின் விநியோகத்தை முழுமையாகச் சீரமைப்பதற்காக தெலங்கானாவில் இருந்து 1,000 மின்சாரத் துறை ஊழியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். தேவைப்பட்டால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் உதவியும் கோரப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, புயலால் நாசமடைந்த நெல் வயல்களை நேரில் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அர்னாப் புயல் பாதிப்பு: ஆந்திராவுக்கு உதவிக்கரம் நீட்டிய தெலுங்கானா அரசு!
