ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவானி, தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் யூடியூப் உலகில் சாதனை படைத்துள்ளார். நீண்ட தூரப் பயணங்களின் போது தான் சமைக்கும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளைப் படம் பிடித்து அவர் சாதாரணமான முறையில் யூடியூபில் பதிவேற்றி வந்தார். தனது மகன் சாகரின் உதவியுடன் ‘ஆர் ராஜேஷ் விலாக்ஸ்’ (R Rajesh Vlogs) என்ற யூடியூப் சேனலைத் தொடங்கிய அவர், பயணங்களின் போது சமைக்கும் வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்ததன் மூலம் மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றார்.
லட்சக்கணக்கில் கொட்டிய யூடியூப் வருமானம்
ராஜேஷ் ரவானியின் சமையல் வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பின் காரணமாக, அவரது சேனல் 3 மில்லியன் சந்தாதாரர்களையும், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றது. இதன் மூலம் அவருக்கு மாதந்தோறும் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைத்ததுடன், சில சமயங்களில் ஒரே மாதத்தில் ரூ.18 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டியுள்ளார். பாரம்பரியமாக அவர் செய்து வந்த லாரி ஓட்டுநர் தொழிலின் மூலமாக மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை மட்டுமே சம்பாதித்து வந்த அவருக்கு, இந்த யூடியூப் வெற்றி புதிய வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் மாறிய லாரி
யூடியூப் மூலம் கிடைத்த கணிசமான வருமானத்தைப் பயன்படுத்தி, ராஜேஷ் தனது லாரியின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றியமைத்துள்ளார். இந்த வாகனம் தற்போது முழுமையாகக் குளிரூட்டப்பட்ட (ஏசி) அறை, பிரத்தியேகமான படுக்கையறை, உடல் அசதியைக் குறைக்கும் வகையிலான அதிநவீன ஓட்டுநர் இருக்கை, தொலைக்காட்சி மற்றும் அலமாரி வசதிகள் மற்றும் பிரத்தியேக சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட காஸ்ட்லியான சொகுசு லாரியாக உருவெடுத்துள்ளது. இந்த மாற்றத்திற்காகவும் புதுப்பித்தலுக்காகவும் அவருக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை செலவாகியுள்ளது.
ஆனந்த் மஹிந்த்ரா பாராட்டு மற்றும் இணையத்தில் வரவேற்பு
லாரியை ஒரு நடமாடும் வீடாக மாற்றியமைத்துள்ள ராஜேஷின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், ‘முயன்றால் எதுவும் சாத்தியம்’ என இணையவாசிகள் பலரும் அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ராஜேஷின் உழைப்பையும் அவரது புதிய முயற்சியையும் வெகுவாகப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
