இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் ரூ.2.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 22.9 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இறக்குமதி தொடர்பான வரி வருவாயில் ஏற்பட்ட உயர்வு இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


மத்திய அரசின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.1.88 லட்சம் கோடியாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு அக்டோபரில் ரூ.2.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இறக்குமதி வருவாயில் 42.2% வளர்ச்சி!
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பில் இறக்குமதி தொடர்பான வரி வசூல் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.50,796 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.72,246 கோடியாக உயர்ந்துள்ளது. இது 42.2 சதவீத வளர்ச்சியாகும்.
உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயும் 15.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.1.37 லட்சம் கோடியாக இருந்தது.
ரூ.2.03 லட்சம் கோடியாக நிகர ஜிஎஸ்டி வருவாய்!
அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூலில் இருந்து வரித் திரும்பப்பெறுதல்களை (Refunds) கழித்த பிறகு கிடைத்த நிகர வருவாய் ரூ.2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.1.61 லட்சம் கோடியாக இருந்த நிகர வருவாய், தற்போது 25.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மொத்தம் ரூ.27,934 கோடி ஜிஎஸ்டி திரும்பப்பெறுதல் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6.5 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த நிகர ஜிஎஸ்டி வருவாய் 16.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.45 லட்சம் கோடியாகவும், சுங்கம் தொடர்பான நிகர ஜிஎஸ்டி வருவாய் 56.2 சதவீதம் உயர்ந்து ரூ.58,319 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
மாநில வாரியான ஜிஎஸ்டி வசூல்!
முக்கிய மாநிலங்களில் மகாராஷ்டிரா ரூ.35,150 கோடி உள்நாட்டு ஜிஎஸ்டி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 13 சதவீதம் அதிகமாகும்.
கர்நாடகாவில் ஜிஎஸ்டி வசூல் 18 சதவீதம் அதிகரித்து ரூ.15,922 கோடியாகவும், குஜராத்தில் 16 சதவீதம் உயர்ந்து ரூ.13,516 கோடியாகவும் பதிவாகியுள்ளது. ஹரியானாவில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.11,529 கோடியாக வசூல் கிடைத்துள்ளது.
அசாம் மாநிலத்தில் ஜிஎஸ்டி வசூல் 47 சதவீதம் அதிகரித்து ரூ.1,934 கோடியாக உயர்ந்துள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் தலா 24 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரூ.14.77 லட்சம் கோடி வசூல்!
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.14.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 13.2 சதவீத வளர்ச்சியாகும்.
இதே காலகட்டத்தில் நிகர ஜிஎஸ்டி வருவாய் 12.6 சதவீதம் அதிகரித்து ரூ.12.69 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளதுடன், இறக்குமதி வருவாயிலும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வரி வருவாய் வளர்ச்சியில் இந்தப் புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
