அதானி நிறுவனம் மோசடி தொடர்பாக தொடர்ந்து கேள்வி கேட்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் 85ஆவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம். ஓய்ந்துவிடமாட்டோம், அதானியின் நிறுவனங்கள் நாட்டை காயப்படுத்துகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கின்றன. எனக்கு 52 வயதாகிறது. எனக்கென்று இன்னும் ஒரு சொந்தமாக வீடு இல்லை. எங்களின் குடும்ப வீடு அலகாபாத்தில் உள்ளது. அதுவும் கூட எங்களுக்கு சொந்தமானது இல்லை. 12, துக்ளக் லேன் வீட்டில் வசித்து வருகிறோம். ஆனால், அதுவும் என்னுடைய வீடு கிடையாது” எனக் கூறினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த பாஜகவின் சம்பித் பத்ரா, ”52 ஆண்டுகளுக்குப் பிறகு, ராகுல் காந்தி பொறுப்புகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளார். அவர் கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார், பின்னர் தனது பொறுப்புகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். நான் உங்களுக்குச் சொல்கிறேன், ராகுல் காந்தி ஜி, மற்ற காந்தி குடும்ப உறுப்பினர்களைப் போலவே உங்கள் பொறுப்பும் பொறுப்பற்ற அதிகாரம்தான். 52 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் உணர்ந்ததை எங்கள் இரு பிரதமர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் புரிந்துகொண்டனர்.” என விமர்சித்துள்ளார்.
