பெங்களூரு தெற்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
பெங்களூரு நகரில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக உள்ளவர் பிரபாகர் ரெட்டி. இரவு வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் என சுமார் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபாகர் ரெட்டி ரியல் எஸ்டேட் தொழிலில் பல முறைகேடுகளை செய்து சொத்துக்களை சேர்த்துள்ளார் என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை மிரட்ட பாஜக இவ்வாறன காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை ஆயுதமாக பாஜக அரசு பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

