Homeசெய்திகள்இந்தியாமத்திய பிரதேசத்தில் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பரிதாப பலி – பலர் கவலைக்கிடம்!

மத்திய பிரதேசத்தில் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பரிதாப பலி – பலர் கவலைக்கிடம்!

-

- Advertisement -

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

we-r-hiring

சம்பவம் நடந்தது எப்படி? மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், பராஜ் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். சாராயம் குடித்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு குமட்டல், வாந்தி உள்ளிட்ட கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, அவர்களைக் குடும்பத்தினர் உடனடியாக பண்டா சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல அருகில் உள்ள மேலும் 2 கிராமங்களில் இருந்தும் இதே பிரச்சினையுடன் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சையும் உயிரிழப்பும்: பாதிக்கப்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்காக புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கும், சாகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், 12 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மருத்துவ அதிகாரி விளக்கம்: இதுகுறித்து சாகர் மருத்துவமனையின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் தேவேஷ் பதேரியா கூறுகையில்:

“கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளோம். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் எந்த வகையான மதுபானத்தை அருந்தியிருந்தாலும், உடனடியாக மருத்துவரிடம் வந்து பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: இச்சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கள்ளச்சாராய விவகாரத்தில் உடனடியாகச் செயல்படவும், தவறு செய்தவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், முழுமையான விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்களை எங்கள் அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது” என எச்சரித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் கொடூரம்: சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பரிதாப பலி! – உயிரிழப்பு மேலும் உயரும் என அச்சம்!

MUST READ