பெங்களூருவில் பதான் திரைப்படத்திற்கு எதிராக பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கர்நாடக மாநிலத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் இன்று சுமார் 200 திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி காவி உடையை அணிந்து ஆபாச நடனம் ஆடி உள்ளதை இந்துத்துவா அமைப்புகள் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இன்று திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் பெங்களூருவில் மாகடி என்ற பகுதியில் உள்ள வீரேஸ் திரையரங்கு முன்பு பஜ்ரங்தள் அமைப்பினர்கள் சுமார் 50 பேர் போராட்டம் நடத்தினர்.
பஜ்ரங்தள் அமைப்பின் பெங்களூரு மாவட்ட செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது படத்தில் நடித்த ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பதான் திரைப்படத்தின் பேனரை எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பெங்களூரு நகரில் நடந்த போராட்டத்தை போல பெலகாவி நகரில் நேற்று
இரவு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த 14 பேர் சுவரூப் திரையரங்கில் பதான் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போராட்டம் நடத்திய 14 நபர்களையும் கைது செய்தனர்.
