ராஜஸ்தானில் அரசுப் பள்ளி விவகாரம் மற்றும் CJP (Cockroach Janta Party) பிரதிநிதிகள் குழுவினர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், சிஜேபி அமைப்பு முழுக்க முழுக்க காங்கிரஸின் முகவராகச் செயல்பட்டு வருவதாக ஆந்திரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைக் பாஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
ராஜஸ்தான் பள்ளி விவகாரமும் மோதலும்
ஜெய்ப்பூர் மாவட்டம் பாக்ரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராம்புரா காண்ட்வார்புரா கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் கால்நடைகளை மேய்க்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையைப் பார்வையிடச் சென்ற சிஜேபி (Cockroach Janta Party) அமைப்பினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே திடீர் மோதலும் வன்முறையும் ஏற்பட்டது.
இதுதொடர்பாக சிஜேபி தரப்பில் பாஜக மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கிராம மக்களோ தாங்கள் அரசியல் மயமாக்கப்படுவதை விரும்பவில்லை என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
காங்கிரஸின் ஏஜெண்டாகச் செயல்படும் CJP
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைக் பாஜி, சிஜேபி அமைப்பைக் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“சிஜேபி அமைப்பு இப்போது முறையாக ‘காங்கிரஸ் ஜனதா கட்சியாக’ (Congress Janata Party) மாறிவிட்டது. இது காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஏஜெண்டாகவே செயல்படுகிறது.”
“மற்ற மாநிலங்களில் நடக்கும் வேலைவாய்ப்புப் பிரச்சனைகள், ஜார்க்கண்ட் ஜே.பி.எஸ்.சி (JPSC) மற்றும் பஞ்சாப் விவகாரங்கள் போன்ற முறைகேடுகளைப் பற்றிப் பேசாத இவர்கள், தங்களுக்குத் தேவையான அரசியல் அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில் மட்டுமே பிரச்சினைகளைக் கையிலெடுக்கிறார்கள்.”
“ராஜஸ்தான் சம்பவத்தை தேசிய அளவில் ஊதிப்பெரிதாக்கி, உள்நோக்கத்துடன் அரசிற்கு எதிராகத் திசைதிருப்ப முயல்கிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரின் புகார்களின் அடிப்படையில் ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் தூதரகத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம் ஏன்? – மத்திய அரசு விளக்கம்!
