ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.


ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது குறித்து, மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, ஒன்றிய அரசு ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம்பெறாதது ஏன்? அரசியல் சட்டத்தின் எந்த அதிகாரத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். ஆன்லைன் விளையாட்டுக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கும் வேறுபாடு இல்லாத வகையில் ஒன்றிய அரசின் வரைவு விதிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் எந்த சட்ட விதிகளின் அடிப்படையில் வரைவு விதிகள் வெளியிடப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் மணிஷ் திவாரி கூறினார்.
அரசியல் சட்டப்படி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான உரிமை ஒன்றிய அரசிடம் இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே எனக் கூறிய மணிஷ், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக அமைச்சர் அளித்த பதிலுக்கும் அவரது அமைச்சகத்தின் செயல்பாட்டுக்கும் முரண்பாடு உள்ளது எனக் கூறிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கே உள்ளது என்பது போல அமைச்சரின் பதில் உள்ளது என தெரிவித்தார். திறமையை பயன்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை வரைவு விதிகள் வரையறுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏற்கனவே 19 மாநிலங்களில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்களை இயற்றி உள்ளதாக விளக்கம் அளித்தார். மேலும் அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தை எட்டிய பின் ஒன்றிய அரசு சட்டம் இயற்றும் என்றும் அவர் கூறினார். ஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளோம் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
