வீட்டு வேலைகளுக்கு நடுவே மிகக் குறைந்த முதலீட்டில் பெண்கள் வீட்டிலிருந்தபடியே சுயதொழில் தொடங்குவதற்கான சிறப்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மசாலா தொழிலைத் தேர்ந்தெடுக்கக் காரணம்
சமையலுக்கு தினமும் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் மசாலாப் பொருட்களுக்கான தேவை எப்போதும் குறைவதில்லை. தனியாகக் கடை வாடகை, மின்சாரக் கட்டணம், ஊழியர் சம்பளம் போன்ற செலவுகள் இன்றி, சொந்த வீட்டுச் சமையலறையிலேயே ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் சுத்தமாகவும் தரமாகவும் தயாரித்து விற்பனை செய்ய முடியும். ஆரம்பத்தில் 5,000 ரூபாய் முதலீட்டில் 3 வகை மசாலா பொடிகளைத் தயாரித்து 10 நபர்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கி, தரமான தயாரிப்பின் மூலம் குறுகிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்று நிலையான வருமானம் ஈட்ட வழிவகை உள்ளது.

தேவையான உபகரணங்கள் மற்றும் முதலீட்டு விவரம்
இயந்திரங்கள்: வீட்டில் உள்ள நல்ல மிக்ஸி அல்லது ரூ.3,000 முதல் ரூ.8,000 விலையிலான சிறிய மசாலா அரைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
எடை தராசு & பொருட்கள்: பொருட்களைத் துல்லியமாக பேக்கிங் செய்ய ரூ.100 முதல் ரூ.800 வரையிலான டிஜிட்டல் எடை தராசு, சல்லடை, ஏர் டைட் டப்பாக்கள், சுகாதாரப் பராமரிப்புக்காகக் கையுறை மற்றும் ஏப்ரன் ஆகியவை தேவைப்படும்.
மூலப்பொருள் & பேக்கிங் செலவு: மூலப்பொருட்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும், பேக்கிங் பவுச் மற்றும் லேபில்களுக்கு ரூ.1,000 வரையிலும் செலவாகும்.
மொத்த முதலீடு: ஒட்டுமொத்தமாக ரூ.5,000 முதல் ரூ.10,000-க்குள் இத்தொழிலை எளிதாகத் தொடங்கிவிட முடியும்.
தயாரிப்பு வகைகள் மற்றும் தர பராமரிப்பு முறைகள்
தொடக்கத்தில் சாம்பார் பொடி, ரசம் பொடி, மிளகாய்த்தூள், இட்லி மிளகாய்ப்பொடி, சிக்கன் மற்றும் மட்டன் மசாலா, சிறுதானிய மசாலா, சுக்குமல்லி காபி தூள் போன்ற அதிக தேவைகளுள்ள பொடிகளைத் தயாரிக்கலாம். மூலப்பொருட்களை மொத்த வியாபாரியிடமோ அல்லது வேளாண் சந்தையிலோ வாங்கி, பூச்சி மற்றும் ஈரம் இல்லாமல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மசாலா பொருட்களை லேசாக வறுத்து, ஆறவைத்து அரைத்து, சல்லடையில் வடிகட்டிப் பேக் செய்ய வேண்டும்.
பேக்கிங், விலை நிர்ணயம் மற்றும் அரசு விதிமுறைகள்
100 கிராம், 250 கிராம், அரை கிலோ, 1 கிலோ ஆகிய அளவுகளில் ஜிப்லாக் பவுச்சுகளில் பேக் செய்வது வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும். கேன்வா (Canva) செயலியைப் பயன்படுத்திப் பிராண்ட் பெயர், லோகோ, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, மொபைல் எண்ணுடன் கவர்ச்சிகரமான லேபிள் ஒட்ட வேண்டும். உணவு சார்ந்த தொழில் என்பதால் அடையாளச் சான்றுகள் மற்றும் முகவரி சான்றுடன் ஆன்லைனில் FSSAI அடிப்படைப் பதிவு செய்வது கட்டாயமாகும். உற்பத்தி செலவுகளுடன் 30% முதல் 40% வரை லாபம் வைத்துச் சந்தை விலைக்கு ஏற்ப தைரியமாக விலை நிர்ணயம் செய்யலாம்.
விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் அரசு உதவி
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் முதற்கட்ட ஆர்டர்களைப் பெறலாம். தொடக்கத்தில் தினசரி ரூ.200 முதல் ரூ.300 பட்ஜெட்டில் மெட்டா விளம்பரங்கள் (Meta Ads) மூலம் உள்ளூர் வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியும். ஆரம்பத்திலேயே அதிகமான வகைகளைத் தயாரிப்பது, தரத்தில் சமரசம் செய்வது, சரியான பேக்கிங் இல்லாமை மற்றும் வாடிக்கையாளர் குறுஞ்செய்திகளுக்குப் பதில் சொல்லத் தாமதிப்பது போன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும். தொழிலை மேலும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள், அரசு வழங்கும் முத்ரா கடன் (MUDRA Loan) மற்றும் PMEGP போன்ற திட்டங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வசதி பெற்றுப் பயன்பெறலாம்.
தினமும் ₹5,000 வரை லாபம் ஈட்டலாம்: கிராமப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்ட 10 உற்பத்தித் தொழில்கள்!
