“ஜோதிடம் என்பது ஒரு ஹோப் (நம்பிக்கை) மட்டுமே; ஆனால், உங்கள் வாழ்க்கையை மாற்றும் உண்மையான சக்தி உங்கள் உழைப்பிலும், இறை உணர்விலும் தான் இருக்கிறது” என்று ஆன்மீக வழிகாட்டி ஸ்ரீ ஆசான்ஜி அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பொது மேடையில் பேசிய அவர், மக்கள் ஏன் ஜோதிடத்தை அதிகம் நம்புகிறார்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து விரிவாகப் பேசினார்.
ஜோதிடத்தின் பின்னணியில் உள்ள உண்மை
மக்கள் ஏன் ஜாதகத்தைப் பார்க்கிறார்கள் என்பதற்கான காரணத்தை விளக்கிய ஸ்ரீ ஆசான்ஜி, “உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் நடக்குமா என்ற பயமும், சந்தேகம் இருக்கும் போதே எவரோ ஒருவரைத் தேடிச் சென்று நடக்காது என்று சொன்னாலும் அதை நம்புகிறீர்கள். இது ஒரு முட்டாள்தனமான அணுகுமுறை. கிரகங்களுக்கு உயிர் கிடையாது, அறிவு கிடையாது, உணர்வுகளும் கிடையாது. பிறகு எப்படி அவை உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
உழைப்பே உண்மையான நல்ல நேரம்
நல்ல நேரம் பார்ப்பதை விட, கடின உழைப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு வீட்டை வாங்குகிறீர்கள். அதை அனுபவிக்கப் பால் காய்ச்சுவதற்கு ஒரு நல்ல நேரத்தைத் தேடுகிறீர்கள். ஆனால், உங்கள் உழைப்பில் வரும் பலனை அனுபவிக்க எந்த நேரமும் நல்ல நேரம்தான். உழைப்புதான் உங்கள் கனவை நனவாக்கும், ஜோதிடம் அல்ல” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

துன்பத்திலிருந்து மீள்வது எப்படி?
துன்பம் மற்றும் கஷ்டங்கள் வரும்போது அதை எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்கிய அவர், “நோய்க்கும், துன்பத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். தீவினையை அகற்றி, தெளிவான சிந்தனையோடு (ஞானத்தோடு) செயல்படுங்கள். இறைவன் உங்களுக்குள் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு எதைச் செய்தாலும் வெற்றி நிச்சயம். ஆதிசங்கரர், வள்ளலார், இயேசு என அனைவரும் உனக்குள் இறைவன் இருக்கிறான், பயப்படாதே என்றுதான் சொன்னார்கள். அதை உணர்ந்து செயல்படுங்கள்” என்றார்.
இறையருளும், செயல்திட்டமும்
”வெற்றி பெறுவதற்கு இறைவனின் அருள் மட்டும் போதாது; திறன்படத் திட்டமிட்டுச் செயல்படும் உழைப்பும் அவசியம். உழைக்காமல் இறைவனை வேண்டினால் மட்டும் பலன் கிடைக்காது. உங்கள் நோக்கம் தெளிவாக இருந்து, அதில் தியானமும், ஒழுக்கமும் இருந்தால், விதி என்று சொல்லப்படும் உங்கள் தடைகளை நீங்களே உடைக்க முடியும். ஒரு நிலத்தை முறையாக உழுது பயிரிட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும், அதைப்போலவே உழைத்த பின்பே உயர்வு கிட்டும்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். முடிவாக, தியானம், மௌனம் மற்றும் ஞானம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து வாழ்பவர்களுக்கு, ஜோதிடம் சொல்லும் தடைகள் எதுவாக இருந்தாலும், அவர்கள் வாழ்வில் வெற்றியை மட்டுமே காண்பார்கள் என்று ஸ்ரீ ஆசான்ஜி வலியுறுத்தினார்.
ஓஷோ ரஜினிஷ்: சர்ச்சைகளின் நாயகன், ஆன்மிகப் புரட்சியாளர் – ஒரு வாழ்க்கை வரலாறு
