கடந்த ஆட்சியை விட இளைஞர்களிடம் தற்போது நூறு மடங்கு போதை பழக்கம் புழக்கத்தில் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் தனது தாயார் சரஸ்வதி பிறந்தநாளையொட்டி பாமக தலைவர் அன்புமணி குடும்பத்தினருடன் நேற்று ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.


மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு கோரிக்கை
தமிழ்நாட்டுக்கு மதுவிலிருந்தும், போதை பழக்கத்தில் இருந்தும், விவசாயிகளுக்கும் இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. தமிழக அரசு பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். போதை பொருட்கள் நுகர்வை முற்றாக ஒழிக்க வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இளைஞர் நலன் மற்றும் நீர் மேலாண்மை
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை. தமிழக அரசு இப்பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல நீர் மேலாண்மைக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிகரிக்கும் போதைப் புழக்கம்
கடந்த ஆட்சிக்காலத்தை விட தற்போது நூறு மடங்கு போதைப்பொருள் புழக்கம் இளைஞர்களிடம் உள்ளது. கோவையில் மாணவர் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் போதை பழக்கம்தான்.
அரரசின் மதுக் கொள்கைக்குக் கண்டனம்
தமிழக அரசு மதுவை ஆன்லைனில் விற்பனை செய்வது மற்றும் டாஸ்மாக் தனியார் மயமாக்குவதற்குத் திட்டமிடுகிறது. அதிக வருமானத்துக்காக மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் காட்சியைப் பார்க்கும் போது தமிழ்நாடு எங்கே செல்கிறது எனத் தோன்றுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்கள்தான் அதிக அளவு வாக்களித்தார்கள், எனவே இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விமர்சனம்
ஒன்றிய அரசு அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பு படிவத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் சாதி என உள்ளது. சாதி என்ற இடத்தில் பொதுமக்களே சாதி பெயரை எழுத வேண்டும். இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வியடையும். பட்டியல் அடிப்படையில் சாதிகளைக் கணக்கெடுக்காமல் இந்த கணக்கெடுப்பு முழுமை பெறாது என்று அவர் கூறினார்.
