எஸ்.பி.வேலு மணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உயர்நீதுமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதேவேளையில் முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


