இந்தியாவின் அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படும் பீகார் இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ‘ஜன் சுராஜ்’ கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், தான் களம் கண்ட முதல் தேர்தலிலேயே பா.ஜ.க.வின் மிக வலிமையான கோட்டையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


நாடு முழுவதும் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசும், குஜராத்தில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்ற போதிலும், பீகார் மாநிலத்தின் பங்கிபூர் தொகுதி தேர்தல் முடிவுகள் அனைவரது கவனத்தையும் தம்பக்கம் ஈர்த்துள்ளன.
பா.ஜ.க.வின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை வீழ்ச்சி:
முன்பு ‘பாட்னா மேற்கு’ என்று அழைக்கப்பட்டு பின்னர் ‘பங்கிபூர்’ எனப் பெயர் மாற்றம் பெற்ற இத்தொகுதி, நீண்ட காலமாக பா.ஜ.க.வின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்தது. இத்தொகுதியில் கடந்த 9 முறையும் பா.ஜ.க.வே தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் நித்தின் நவீனின் தந்தை நான்கு முறையும், நித்தின் நபின் ஐந்து முறையும் இங்கு இமாலய வெற்றி பெற்றுள்ளனர்.
அத்தகைய பாரம்பரியம் மிக்க பா.ஜ.க. கோட்டையில்தான், தற்போது பிரசாந்த் கிஷோர் முத்திரை பதித்து அசத்தியுள்ளார். மேலும், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பீகார் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி, பத்துக் காலம் முதல்வராகத் கோலோச்சிய நிதிஷ் குமார் தீவிர அரசியலிலிருந்து விலகிய பிறகு நடந்த முதல் தேர்தல் என்பதும், இதில் அவரது தரப்பு தோற்றுள்ளதும் பீகார் அரசியலின் கணக்குகளைத் தலைகீழாக மாற்றுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் வியூகமும் வெற்றியக்கான காரணங்களும்:
இந்த எதிர்பாராத வெற்றிக்குப்பின் பல வலுவான அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது:
மாற்றத்தை விரும்பிய மக்கள்: பா.ஜ.க. வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட, தங்களுக்குச் சிறந்த மாற்றாகப் பிரசாந்த் கிஷோரை பங்கிபூர் வாக்காளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
சாதி கடந்த அரசியல்: வழக்கமான சாதி மற்றும் மத விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த மக்கள் பிரச்சினைகளை அவர் தனது பிரசாரத்தின் மையப்புள்ளியாக மாற்றினார்.
உள்ளூர் அளவிலான பிரசாரம்: பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை விட, வீடு வீடாகச் சென்று உள்ளூர் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திய வியூகம் அவருக்குக் கை கொடுத்துள்ளது.
உட்கட்சி பூசல் சாதகம்: பா.ஜ.க.-விற்குள் நிலவிய உள்ளூர் அளவிலான உட்கட்சி முரண்பாடுகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி, அவற்றைத் தனது வெற்றிக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார்.
மாணவர் போராட்டங்களின் தாக்கம் மற்றும் பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் பதிவாகியுள்ள இந்த வெற்றி, ஆளுங்கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் விடப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவு பீகார் மாநில அரசியலில் புதியதொரு மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
