இந்திய அளவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி வலுவிழந்து சிதறிப் போக வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் முதன்மையான விருப்பம் என்றும், அதற்குத் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் வழிவகுக்கின்றன என்றும் வி.சி.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“பா.ஜ.க.வின் அஜெண்டாவும் சிதையும் கூட்டணியும்!”
ஆளூர் ஷாநவாஸ் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள், “இந்தியாவிலேயே ‘இந்தியா’ கூட்டணி மிகவும் உறுதியாகவும் வலுவாகவும் இருந்தது தமிழ்நாட்டில்தான். ஆனால், பா.ஜ.க.வின் திட்டமிட்ட நகர்வுகளாலும் அரசியல் மாற்றங்களாலும் அக்கூட்டணியின் உறுதித்தன்மை தற்போது கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது”.

பா.ஜ.க.விற்குச் சாதகமான சூழல்
“நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதிலிருந்து, பல்கலைக்கழகங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாக்குவது வரை அனைத்தும் யாருடைய அஜெண்டா? ஆரம்பத்தில் இந்து அறநிலையத்துறையை கடுமையாக எதிர்த்துப் போராடிய பா.ஜ.க., தற்போது அரசைப் பாராட்டுவதும், குற்றச்சாட்டுகளில் மென்மைப்போக்கைக் கடைப்பிடிப்பதும் கவனிக்கத்தக்க மாற்றங்களாகும்”.

“த.வெ.க. மற்றும் காங்கிரஸின் அரசியல் கணக்குகள்!”
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மற்றும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவர் தெரிவிக்கையில், “டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைதானபோது, அதற்குரிய வலுவான எதிர்ப்பை இங்குள்ள கூட்டணிக் கட்சிகள் பதிவு செய்யத் தவறிவிட்டன. த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை ரீதியாக பா.ஜ.க.வின் போக்கோடு பயணித்துக் கொண்டே, இடதுசாரிகள் மற்றும் வி.சி.க. போன்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைக்க அல்லது தக்கவைக்க நினைக்கிறார். ‘இந்தியா’ கூட்டணியில் இணையத் தயக்கம் காட்டும் அதேவேளையில், பா.ஜ.க.வை நேரடியாக எதிர்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை”* எனக் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற பலமும் காங்கிரஸின் முடிவுகளும்!
தேசிய அளவில் பா.ஜ.க.வின் மசோதாக்களையும் திட்டங்களையும் எதிர்கொள்ள 22 எம்.பி.க்களைக் கொண்ட தி.மு.க. போன்ற வலுவான கட்சிகளின் தேவை அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமே இல்லாத ஒரு கட்சியோடு கூட்டணி அமைப்பதற்காக, உறுதியான நாடாளுமன்றப் பலத்தைக் கொண்ட கட்சிகளை நழுவவிடுவது போன்ற காங்கிரஸின் சில முடிவுகள் அகில இந்திய அரசியலில் பின்னடைவையே ஏற்படுத்தும் என்றும் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்தார்.
