தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (25-08-2026) தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, காலித் தொகுதிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட காரசார விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் எழுப்பிய கேள்வி
மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், “234 உறுப்பினர்களை உள்ளடக்கிய பேரவை இது. முதல்வர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார். தற்போது பேரவையில் 6 தொகுதிகள் காலியாக உள்ளன. 6 உறுப்பினர்கள் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதற்கான முழுமையான காரணம் யாருக்கும் தெரியவில்லை. இதன் காரணமாக அந்த 6 தொகுதிகளின் மக்களின் குரல் அவையில் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்த நிலையில், அந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது” எனக் குறிப்பிட்டார்.

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் குறுக்கீடு
ஆஸ்டின் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “அவர்களது விலகல் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இடைத்தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையமே தீர்மானிக்க முடியும், நாம் அல்ல. எனவே, இந்த விவாதத்தைத் தவிர்த்துவிட்டு மானியக் கோரிக்கையின் மீது பேசுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
அமைச்சர்களின் விளக்கமும் உதயநிதி ஸ்டாலின் பதிலடியும்
இதனைத் தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மாவட்டங்களின் பிரச்சினைகளைக் கவனிப்பதற்காகவே முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளார். 6 தொகுதிகளில் உறுப்பினர்கள் இல்லை என்றாலும், அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நேரடியாகச் சென்று அங்குள்ள பிரச்சினைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் என்பது அனைத்து ஆட்சிகளிலுமே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். எங்கள் எம்.எல்.ஏ யாரையும் குற்றம் சாட்டவில்லை. 6 உறுப்பினர்களும் ஒரு கூட்டத்தொடரில்கூடப் பங்கேற்காமல் ராஜினாமா செய்துவிட்டனர் என்ற உண்மையையே சுட்டிக்காட்டினார்” என விளக்கமளித்தார்.
எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையே காரசாரம்
அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “6 தொகுதிகளின் மக்கள் பிரச்சினைகள் மனுக்களாகப் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு நாளில் எதுவும் நடந்துவிடாது. தொகுதிக்கு என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்தால்தான், அவர் நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவர முடியும். பொறுப்பு அமைச்சர் ஒரு நாள் மட்டுமே சென்று வருவதால், அப்பகுதி மக்களின் முழுமையான பிரச்சினைகளை அறிய முடியாது” என வாதாடினார். மீண்டும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “விரைவாகத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணமும் கூட. அதிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று கூறினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “இந்த விவாதம் வேறு பாதையில் செல்கிறது” எனக் குறிப்பிடவே, இருதரப்பிற்கும் இடையே காரசார விவாதம் வெடித்தது.
அதிமுக அமளி – அமைதியை ஏற்படுத்திய சபாநாயகர்
விவாதம் முற்றியதால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஆவேசமாக எழுந்து நின்று அவையில் அமளியில் ஈடுபட்டனர். சூழ்நிலை கைமீறிச் சென்றதையடுத்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கோபமடைந்து, உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாகத் தங்களது இடங்களில் அமருமாறு உத்தரவிட்டார். சபாநாயகரின் கண்டிப்பான தலையீட்டைத் தொடர்ந்து அவையில் அமைதி திரும்பியது.
அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா? விஜய்யா? கூட்டணிக்குள் வெடிக்கும் பூகம்பம்
