Homeசெய்திகள்அரசியல்"ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தவெக அரசு" : தமிழக அரசுக்கு சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை!

“ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தவெக அரசு” : தமிழக அரசுக்கு சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை!

-

- Advertisement -

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி ஜனநாயக ரீதியான போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

“எதிர்ப்புகளை ஒடுக்குவது ஜனநாயகம் அல்ல”

தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், “திமுக ஆட்சிக்காலத்தில் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் போராட்டங்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டு உரிமைகள் நசுக்கப்படுகின்றன. சென்னையின் மக்கள் கூடும் இடங்களில் அனுமதி தராமல், ஜன நடமாட்டமில்லாத பகுதிகளில் போராட்டம் நடத்தக் கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கவே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“கம்யூனிஸ்டுகள் மீதான கண்காணிப்பு”

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் வட்டாட்சியர் மூலம் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களைப் பட்டியலிட உத்தரவிடப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய சுப்பராயன், “பரவலான எதிர்ப்பு கிளம்பியதால் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், மாநில அரசின் உயர்மட்டத்திலிருந்தே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழுத்தத்தினால் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்பதற்கு மாநில அரசு பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“ஆட்சி மீதான நிலைப்பாடு”

தற்போதைய ஆட்சியை ஆதரிப்பது கொள்கை ரீதியானது அல்ல என்றும், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் உரிமையைத் தடுக்கும் பாஜகவின் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காகவே ஆதரவு அளிக்கப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“இந்த ஆட்சியை எவ்வளவு காலம் ஆதரிப்போம், எப்போது எதிர்த்துப் போராடுவோம் என்பதை அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே நாங்கள் தீர்மானிப்போம். ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை அரசு அங்கீகரிக்கும் வரை நாங்கள் ஆதரிப்போம், ஜனநாயக உரிமைகளை முடக்கினால் எதிர்த்துப் போராடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சனம்

சட்டமன்றத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்துக் கருத்து தெரிவித்த சுப்பராயன், “முதலமைச்சர் உள்ளே நுழையும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கூறுவது சட்டமன்ற விதிமுறைகள் பற்றிய அறியாமையைக் காட்டுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அமைச்சர்களின் பேச்சையே அவைத்தலைவர் அவை குறிப்பிலிருந்து நீக்கியிருப்பது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன என்பதையே காட்டுகிறது” என்று விமர்சித்தார்.

இறுதியாக, “இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை அரசியல் கட்சிகளும் மக்களும் அனுபவிப்பதைத் தடுக்காமல் ஆட்சி நடத்த வேண்டும்” என்பதே தமிழக அரசுக்கு தனது அறிவுரை என சுப்பராயன் தெரிவித்தார்.

மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதால் அரசியல் பாதிப்பு ஏற்படும்: எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சு!

MUST READ