முதலில் வீழ்ந்தது அதிமுக. அடுத்து அடிமையானது திமுக. தற்போது அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளதோ என்ற பலத்த சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பிரதமரின் பேச்சு; தலைமைச் செயலாளரின் அதிரடி!
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆயுதம் தாங்கிய நக்சலிசம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், அதனுடைய சித்தாந்த மற்றும் அறிவுசார் ஆதரவாளர்களான ‘திமாகி நக்சல்’ (சிந்தனை வழி நக்சல்கள்) சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். இந்த சிவப்பு பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்” எனப் பேசினார்.

கொடுமையான தேர்வு முறைகளுக்கும், வினாத்தாள் கசிவு கோல்மால்களுக்கும், கல்வியைப் பெருவணிகமாக்குவதற்கும் எதிராகப் போராடும் மாணவர்களையும் கல்வியாளர்களையும் ‘நக்சல்’ என முத்திரை குத்துவது ஏற்க முடியாத ஒன்றாகும். ஆனால், பிரதமரின் இந்த உரையை அப்படியே சிரமேற்கொண்டு, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் சுற்றறிக்கையாக மாற்றி அமல்படுத்தியுள்ளார். டெல்லி தலைமைக்கு பணிந்து செயல்படும் தலைமைச் செயலாளர் சாய்குமார், இடதுசாரி மாணவர்கள் மற்றும் கரப்பான் ஜனதா கட்சி மாணவர்களைக் காவல்துறை மூலம் அடக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முதல்வருக்குத் தெரியாமல் நடந்ததா?
இப்படி ஒரு சுற்றறிக்கையை ஆகஸ்ட் 14-ஆம் தேதி அனுப்புவது குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் அவர் கலந்து பேசினாரா என்ற கேள்வி எழுகிறது. உயர்கல்வித் துறை அமைச்சரின் சுற்றறிக்கை ஆகஸ்ட் 17-இல் அனுப்பப்பட்டது. சட்டசபையில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், இதில் தலைமைச் செயலாளருக்குத் தொடர்பில்லை என்றும், தவறான வாசகங்கள் நீக்கப்பட்டு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும் கூறினார். ஆனால், அந்த நேரத்தில் அரசு கல்லூரி முதல்வர்களிடம் அந்தச் சுற்றறிக்கை விநியோகிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. ஒருபுறம் “மாணவர் உரிமைகளை மதிக்கிறோம்” என வேஷம் போட்டுக்கொண்டு, மறுபுறம் டெல்லியின் உத்தரவை தவெக அரசு நடைமுறைப்படுத்துகிறது.
தொடரும் காவிமயமாக்கல்!
மத்திய பாஜக அரசின் அரசியல் உள்நோக்கத்திற்கு உடன்பட்டுச் செயல்படும் அதிகாரிகளைக் கையாள முடியாமல் ஆட்சியாளர்கள் கைகட்டி நிற்கின்றனர். இந்தச் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து எவ்வித விளக்கமும் வராத பட்சத்தில், அவர் அதிகாரிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை என்பதாகவே பார்க்கப்படுவார். கடந்த திமுக ஆட்சியிலும் அதிகாரிகளின் வழியே கல்வித்துறை காவிமயமாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், ஆளுநரின் தன்னிச்சையான செயல்பாடுகள் எனப் பலவற்றை அன்றைய அரசு வேடிக்கை பார்த்தது. அதிமுக, திமுக வழியிலேயே தவெகவும் பாஜகவோடு ஒத்திசைந்து செயல்படுகிறதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. பாஜகவிற்குப் பணிந்து செல்லும் அடிமைகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் தாங்கிப் பிடிக்கமாட்டார்கள்; வீழ்த்துவார்கள் என்பது மட்டும் சத்தியம்!
“ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தவெக அரசு” : தமிழக அரசுக்கு சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை!
