தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.


சென்னையில் நடந்த மோதல் சம்பவம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தொடரும் கொலைச் சம்பவங்கள்
கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
அதேபோல சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
100 நாள் விளம்பர ஆட்சிக்கு கண்டனம்
தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமை என விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் கோரிக்கை
ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து முந்தைய ஆட்சியாளர்களையே குற்றம் சாட்டி வரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்போதுதான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, குற்றங்கள் நடைபெற்ற பின்னர் கைது செய்வதோடு நிறுத்தாமல், குற்றங்கள் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தவெக அரசும் முதலமைச்சரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தவெக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி! “ரீல்ஸ் வெளியிடும் அரசாக செயல்படுகிறது”
